* அரசு விழாக்களிலும் உற்சாகம் * பண்பாட்டு ஆர்வலர்கள் பெருமிதம்
‘‘தமிழர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று எழுதிய வரிகள் எப்போதும் கல்வெட்டாய் நிலைத்து நிற்கிறது. இப்படி தனிக்குணம் மட்டுமன்றி பண்பாடு, கலாச்சாரம், வீரம், விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர் நமது தமிழ்க்குடி முன்னோர்கள். முதன் முதலில் தமிழர்களின் வாழ்க்கை மலைச்சாரல்களில் தான் தோன்றியது. அப்போது அவர்கள் வேட்டையாடி உணவை பெற்றனர். இதற்காக வில், அம்பு, கவண், ஈட்டி போன்றவற்றை கருவிகளாக பயன்படுத்தினர். காய், கனி, கிழங்குகளை தேடி உண்டு வாழ்க்கை நடத்தினர். ஒரு கட்டத்தில் மிகச்சிறிய அளவில் புன்செய் பயிர் செய்யவும் அறிந்து கொண்டனர். அதற்கு பிறகு புல்பூண்டுகள், இலைதழைகளால் வேயப்பட்ட குடிசைகளில் குடியேற ஆரம்பித்தனர். மலைநாட்டு மக்கள் என்று பெயர் சூட்டிக்கொண்ட இவர்கள், தம்மை போன்ற வடிவங்களில் ெதய்வங்களையும் உருவாக்கி வழிபட ஆரம்பித்தனர்.
இப்படி மூத்தகுடி தமிழ்கடவுளாய் உருவெடுத்த வள்ளி மாணாளனே முருகப்பெருமான். இதன் தொடர்ச்சியாக குன்றுகளின் மேல் ேகாயில்களை கட்டி வழிபட ஆரம்பித்தவர்கள், தங்கள் வாழ்க்கை முறை சார்ந்த பொழுது போக்கு அம்சங்களிலும் மனதை திருப்ப ஆரம்பித்தனர். இது பாட்டு, விளையாட்டு, பறையிசை, குழலிசை, தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் என்று அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்ல ஆரம்பித்தது. இவை பொழுதுபோக்கு என்ற பெயரில் உள்ளத்ைத லயிக்க செய்ததோடு, உடலுக்கும் வலுவூட்டியது. இதேபோல் நம்முன்னோர்கள் கண்டு பிடித்த ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு நன்மை உள்ளது.
இந்த விளையாட்டுகள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாச்சாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கைமுறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம்மனத்திற்கும், நம் உடலுக்கும் நம்பிக்கைகளை வழங்கக்கூடிய விளையாட்டாகவே இருந்து வந்தது. இதன் காரணமாக நமது முன்னோர்கள் உடல் வலிமையோடு வாழ்ந்தனர். காலத்தின் சுழற்சியும், கணிப்பொறியின் வளர்ச்சியும் ஸ்மார்ட் போன் வடிவத்தில் உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் பாரம்பரிய விளையாட்டுகள் மீதான ஈர்ப்பு என்பது மெல்லமறைந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், சமீபகாலமாக தமிழகத்தில் நடக்கும் திருவிழாக்கள், பாரம்பரிய கலைகளுக்கும், விளையாட்டுகளுக்கும் புத்துயிர் ஊட்டி வருகிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளனர் கலைபண்பாடு அமைப்புகளின் மேம்பாட்டாளர்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு கலைபாண்பாடு மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழர்களின் பாரம்பரிய கலைகளும், மண்ணின் மகிமை கூறும் விளையாட்டுகளும் தேய்பிறையாகி வருகிறது. உதாரணமாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 3நாட்கள் கொண்டாடப்படும். அப்போது முக்கிய நிகழ்வாக ஜல்லிக்கட்டு போட்டிகள் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதே நேரத்தில் கடந்த காலங்களில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு மட்டுமன்றி பரிவேட்டை, சிலம்பம், சடுகுடு ஓட்டம், இளவட்டக்கல், வழுக்குமரம் ஏறுதல், வண்டி ஓட்டம், ஆடுபுலி ஆட்டம் என்று ஆண்களுக்கான விளையாட்டு போட்டிகளும் அதிகளவில் நடக்கும்.
அதே போல் பெண்கள், சிறுவர்களுக்கான தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், நொண்டியாட்டம், கண்ணாமூச்சு, கிச்சுகிச்சு தாம்பூலம் என்று நூறுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் நடக்கும். இது மட்டுமன்றி கரகாட்டம், ஒயிலாட்டம், குறவன்குறத்தி, கோலாட்டம், கும்மியாட்டம் என்று கலைநிகழ்ச்சிகளும் களை கட்டும். ஆனால் விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி, காலப்போக்கில் இவை அனைத்திற்கும் தடைக்கல்லாகி விட்டது. இதனால் அரிய கலைகள் அனைத்தும் அழிவின் பிடியில் சிக்கியுள்ளது என்பது வேதனையாக இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு நடத்தும் ஒவ்வொரு விழாவிலும் இது போன்ற கலைகளுக்கு புத்துயிர் ஊட்டி வருகிறது.
அரசு விழாக்களில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், பள்ளிகளில் மாணவர் கலைத்திருவிழா, புத்தக கண்காட்சியில் தமிழர் மரபியல் கலைகளுக்கு முக்கியத்துவம், தமிழ்நாடு கலைசங்கமம் ேபான்ற நிகழ்வுகள் நமது பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் ஊட்டி வருகிறது. அயல்நாடுவாழ் தமிழர்களும் அங்கு நடக்கும் திருவிழாக்களில் நமது கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அது மட்டுமன்றி திருவிழாக்கள் அனைத்தையும் பாரம்பரிய கலைவளர்க்கும் களங்களாகவும் தமிழ்நாடு அரசு மாற்றி வருகிறது. இதுஉண்மையில் மடிந்து வரும் கலைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் அரிய செயல். தற்போது கணினியிலும் பிரத்யேக ஆப்களை உருவாக்கி இந்த கலைகளுக்கு பல்வேறு அமைப்புகள் உயிரூட்டி வருவது பாராட்டுக்குரியது. இவ்வாறு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
முடக்கி போடுகிறது செல்போன் மோகம்
கடந்த காலங்களில் பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புறங்களில் பாகுபாடு பார்க்காமல் சடுகுடு, கபடி, கும்மியாட்டம், வீரவிளையாட்டு உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். இந்த விளையாட்டுகளில் சிறியவர்கள், பெரியவர்கள் என்று பாகுபாடு பார்க்காமல் விளையாடுவார்கள். இதை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவார்கள். இதன் மூலம் மனம் மேன்மையடையும், மகிழ்ச்சி பொங்கும். இன்று விஞ்ஞானவளர்ச்சி காரணமாக 80 சதவீதம் குழந்தைகள் செல்போனில் விளையாடுவதை அதிக நேரம் செலவழிக்கின்றனர். அவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டு பற்றி தெரியவில்லை. செல்போன் மோகத்தில் இருந்து மீண்டு, இயல்பு நிலையில் திருவிழா களங்களுக்கு வந்தால் பாரம்பரிய விளையாட்டுகள் மீது ஆர்வம் பிறக்கும்,’’ என்பது விவசாயிகளின் ஆதங்கம்.
உடலோடு மனமும் வலுப்பெற்று விடும்
வழுக்குமரம் ஏறுதல் ஆடவரின் உடல் திறனை அதிகரித்தது. ஆடுபுலி ஆட்டம் அறிவுத்திறனை வளர்த்தது. உறியடி மனஉறுதியை கொடுத்தது. ஜல்லிக்கட்டு தமிழரின் ஒப்பற்ற வீரத்திற்கு சாட்சியமானது. சிலம்பம் காலுக்கும் உடலுக்கும் உரமூட்டியது. பல்லாங்குழியால் விரலுக்கு பயிற்சியும், கணக்கிடும் திறனும் கிடைத்தது. கோலிக்குண்டு இலக்கை நோக்கி சரியாக அடிக்க வேண்டும் என்பதை உணர்த்தியது. நொண்டி விளையாட்டு நம்பிக்கையை வளர்த்தது. இப்படி தனித்துவம் பெற்ற ஆயிரமாயிரம் விளையாட்டுகள் இன்று எழுத்துக்களில் மட்டுமே உள்ளது. இதை மீட்டெடுத்து மீண்டும் புத்துயிர் கொடுப்பது மிகவும் அவசியம். குறிப்பாக இந்த விளையாட்டுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்ப்பதால் உடலோடு மனமும் வலுப்பெறும் என்கின்றனர் பாரம்பரிய விளையாட்டு ஆர்வலர்கள்.
