* நோயாளிகள், பொதுமக்கள் கடும் அவதி
* கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டிக் கிடக்கும் மருத்துவக் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களும் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து 1997ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு 29 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பிரிக்கப்பட்ட பொழுது மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்பட போதிய கட்டிடங்கள் இல்லாததால், திருவள்ளூர்-காக்களூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான கட்டிடங்களில் செயல்பட்டு வந்தது.
இதனையடுத்து மாவட்ட நிர்வாக வசதிக்காக புதியதாக ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் வளாகம் கட்ட புங்கத்தூர் ஏரியில் இடம் தேர்வு செய்யப்பட்டு 1996ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டு வரை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்து அவைகளை விரைவாக கட்டி முடிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரே திறந்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ஊரக வளர்ச்சித் துறை, சமூக நலத்துறை அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குனர்கள் அலுவலகங்கள், மாவட்ட விளையாட்டு மைதானம், வனத்துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், மாசு கட்டுப்பாட்டு அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலகம், கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் ஆகியோருக்கான குடியிருப்புகளும், விருந்தினர் மாளிகை, காவல் துறை குடியிருப்புகள் உள்பட பல்வேறு துறைகளுக்கும் தனித்தனியாக கட்டிடங்கள் புதியதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருவள்ளூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வந்த மருத்துவமனை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டு சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மட்டும் சுமார் ரூ.200 கோடி மதிப்பீட்டில் 6 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு 1500 மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் அமைக்கப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனை கட்டிட மற்றும் உபகரண வசதிக்கேற்ப இதுவரை மருத்துவர்கள் நியமிக்கப்படாததால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ள மருத்துவமனையாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இது சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகள் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் அரசுக்கு வைக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெறும் மருத்துவமனையாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்தாமல் மருத்துவமனை வளாகத்திலேயே கொட்டப்படுவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், பொது மக்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவமனை அருகே மருத்துவமனையில் சேகரிப்படும் குப்பை கழிவுகளை கொட்டுவதால் பிறந்த குழந்தைக்கு உடனடியாக நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
மேலும் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் மருத்துவமனையில் குழந்தைகளை பெற்ற பெண்களும் குழந்தைகளும் இருக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இதுபோன்று மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் உள்ள மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுத்து நோய் தொற்று ஏற்படுவதில் இருந்து நோயாளிகளையும், நோயாளிகளுடன் வரும் உறவினர்களையும், பொதுமக்களையும் காப்பாற்ற மாவட்ட கலெக்டரும் மருத்துவமனை நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவமனை அருகே மருத்துவமனையில் சேகரிப்படும் குப்பை கழிவுகளை கொட்டுவதால் பிறந்த குழந்தைக்கு உடனடியாக நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
