×

இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வரும் கடல் ஆமைகளை மீன்பிடி வலைகளிலிருந்து பாதுகாக்க திட்டம்: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வரும் கடல் ஆமைகளைப் மீன்பிடி இழுவலைகளிலிருந்து பாதுகாத்திட ஆமை விலக்கு சாதனங்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒவ்வொரு ஆண்டும் கடல் ஆமைகளின் இனப்பெருக்க காலமான ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 முடிய, கடல் ஆமைகள் முட்டையிடும் தமிழ்நாடு கடற்பகுதியில் அவற்றை பாதுகாத்திடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர்களை இணைத்து, மீனவ கிராமங்களில் கடல் ஆமை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடல் ஆமை பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாமல், ஆமைகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல், மீனவர்களின் மீன்பிடி இழுவலைகளில் சிக்கும் ஆமைகள் பாதுகாப்பாக வெளியேற வழிவகுக்கும் ஆமை விலக்கு சாதனம் கொச்சியிலுள்ள ஒன்றிய மீன்வள தொழில்நுட்ப நிலைய உதவியுடன் வடிவமைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள மீன்பிடி இழுவலைப்படகுகளுக்கு விலையில்லாமல் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக 50 மீன்பிடி விசைப்படகுகளுக்கு ரூ 11.75 லட்சம் மதிப்பீட்டில் சோதனை அடிப்படையிலும், அதனைத்தொடர்ந்து 2,613 படகுகளுக்கு ரூ 6.29 கோடி மதிப்பீட்டிலும் ஆமை விலக்கு சாதனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தற்பொழுது இழுவலைகளில் இச்சாதனங்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. மீனவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும் இச்சாதனங்களின் மூலம் மீன்பிடி இழுவலைகளில் கடல் ஆமைகள் சிக்காமல் வெளிச்செல்வதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.

Tags : Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu ,
× RELATED ரூ.3,548 கல்வி நிதி விடுவிக்கப்படுமா?.....