×

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்

கழுகுமலை, ஜன. 29: கழுகு மலை கழுகாசலமூர்த்தி கோயில் தைப்பூச திருவிழாவில் நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.தென்பழநி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கடந்த 19ம்தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா ஆகியவை நடந்து வருகிறது. 8ம் நாளான கடந்த 26ம்தேதி சுவாமிக்கு பச்சை சாத்தி தீபாராதனை, வீதியுலா நடந்தது.10ம் திருநாளான நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல், திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடந்தது. காலை 8 மணிக்கு சுவாமி கழுகாசலமூர்த்தி மற்றும் அம்பாள்கள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.இதில், திமுக மாநில விவசாய தொழிலாளரணி செயலாளரும், கழுகுமலை பேரூராட்சி முன்னாள் தலைவருமான சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சந்திரசேகர், கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பிரதோஷ குழுத்தலைவர் முருகன், டாக்டர் இசக்கியப்பன், டாக்டர் சண்முகம், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தர், நகர செயலாளர் முத்துராஜ் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்று “வெற்றி வேல் வீரவேல்” என்ற கோஷங்கள் முழங்கி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

கோ ரதத்தில் விநாயகப்பெருமான் முன் செல்ல, சட்ட ரதத்தில் உற்சவர் மூர்த்தியுடன் வள்ளி, தெய்வானை தேரில் தெற்கு ரதவீதி, பஸ்நிலைய சாலை, கோயில் மேலவாசல் தெரு, அரண்மனை வாசல் தெரு, கீழபஜார் வழியாக சென்று தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் இரவு 8 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று அரசு விடுமுறை என்பதால் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், வில்லிபுத்தூர், கோவில்பட்டி, சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர் சண்முகராஜ், பரமசிவம் மற்றும் சீர்பாத தாங்கிகள் செய்திருந்தனர்.

Tags : Thaipusam Festival ,Kalugumalai Kalugasalamoorthy Temple ,
× RELATED தைப்பூச திருவிழா வரும் முன் கடம்பன்...