×

51 நாளாக மாணவர்கள் போராட்டம் எதிரொலி ராஜா முத்தையா கல்லூரி சுகாதாரத்துறைக்கு மாற்றம் கடலூர் அரசு மருத்துவ கல்லூரியாக செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு

சிதம்பரம், ஜன. 29: மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வந்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த கல்லூரி கடலூர் அரசு மருத்துவ கல்லூரியாக செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடந்த 2013ம் ஆண்டு முதல் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

அரசால் நிர்வகிக்கப்படும் இந்த கல்லூரியில், அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தைவிட, 30 மடங்கு அதிகமாக இருக்கிறது. தனியார் சுயநிதிக் கல்லூரிகளைவிட 3 மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை கண்டித்தும், அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை தங்களிடம் பெற வலியுறுத்தி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

 இதன் காரணமாக கடந்த 20ம் தேதி முதல் மருத்துவக்கல்லூரிக்கு கால வரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவ, மாணவிகள் விடுதியை விட்டு வெளியேறுமாறும் பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை போன்றவை சுகாதாரத்துறைக்கு மாற்றப்படும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.  அந்த அறிவிப்பை செயல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து, 3 கல்லூரிகளையும் சுகாதாரத்துறைக்கு மாற்றம் செய்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ், 113.21 ஏக்கரில் அமைந்துள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை போன்றவை முழுவதுமாக சுகாதாரத்துறைக்கு மாற்றப்படுவதாகவும், இனி இந்தக் கல்லூரிகள் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளாக செயல்படும். 3 கல்லூரிகளிலும் பயிலும் 2293 மாணவர்கள், 3 கல்லூரிகளிலும் பணியாற்றும் 332 பேராசிரியர்கள், 1426 பணியாளர்கள், 287 ஓய்வூதியதாரர்கள், அவர்களுக்கான செலவினங்கள், அங்கீகாரம் போன்ற அனைத்தும் இனி சுகாதாரத்துறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், சுகாதாரத்துறை சார்பில் இதற்கான உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.

3 கல்லூரிகளிலும் இடங்களை நிரப்புதல், கட்டணம் நிர்ணயித்தல் போன்ற பணிகளை சுகாதாரத்துறையே மேற்கொள்ள வேண்டும் என்றும், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அங்கீகாரத்தை மாற்ற வேண்டும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதன் மூலம், கடந்த 51 நாட்களாக நடந்து வந்த மாணவர்களின் போராட்டத்துக்கு தமிழக அரசு  முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதே நேரத்தில் மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதே கட்டணம் இந்த கல்லூரிகளில் வசூலிக்கப்படுவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Cuddalore Government Medical College ,Raja Muthiah College Health Department ,
× RELATED கடலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!!