நாமக்கல், ஜன.24: நாமக்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்த ஐந்து நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில இடங்களில், நாளை(25ம் தேதி) மற்றும் நாளை மறுநாள்(26ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. பகல் நேர வெப்பம் 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், இரவு நேர வெப்பம் 66 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் கிழக்கு மற்றும் வட கிழக்கு திசையிலிருந்து வீசும். அதன் வேகம் மணிக்கு 4-8 கி.மீ., என்றளவில் இருக்கும். கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசியை அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தில் இருக்கும் கால்நடை மருத்துவரை அணுகி போட்டுக் கொள்ளவேண்டும்.
காலை 10 மணிக்கு பிறகு தான், வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். இதன்மூலம் ஆடுகளை நிமோனியா வைரஸ் தாக்காவண்ணம் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும், உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தையும் தக்க வைத்துக் கொள்ளலாம். எதிர்வரும் கோடை காலங்களில் ஏற்படும் தீவன பற்றாக்குறையை சமாளிக்க, மானாவரி மற்றும் தரிசு நிலங்களில் கொழுக்கட்டை புல், முயல் மசால் போன்ற தீவன பயிர்களை பயிரிட வேண்டும். இரவு வெப்பம் குறைவாகவும், குளிர்ந்த காற்றும் வீசுவதால் குறிப்பாக இளம்கன்று மற்றும் குட்டிகளை தகுந்த கொட்டகைகளில் அடைக்க வேண்டும். மேலும், குண்டு பல்பு போன்ற வெப்பமூட்டிகளை பொருத்துதல், கொட்டகைக்கு வரும் காற்றின் அளவை குறைக்க கொட்டகையைச் சுற்றிலும் படுதாவைக் கட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சுவாசம் சம்பந்தமான பிரச்னைகளை சரிசெய்ய முடியும்.
கடந்த வாரம் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள், பெரும்பாலும் கோழி காலரா, வெள்ளைக்கழிச்சல் மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழல் சுவாச நோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. எனவே, கோழி பண்ணையாளர்கள் தகுந்த உயிர் எதிர் மருந்துகளை அளிக்குமாறும், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தண்ணீரில் கிருமி நாசினி தெளிக்கவேண்டும். கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி, தகுந்த சிகிச்சை மற்றும் உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். தற்போது நிலவும் வானிலை காரணமாக, உளுந்து மற்றும் பாசிப்பயறு பயிர்களில் அசுவினி பூச்சியின் தாக்குதல் பரவலாக தென்படுகிறது. இதன் பரவலைக் கட்டுப்படுத்த, ஒரு ஏக்கருக்கு 5 என்ற அளவில் மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி வைத்து கண்காணிக்கலாம். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
