×

குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் தீவிரம்

நாமக்கல், ஜன.24: நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ், ரயில் நிலையங்களில், போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் வரும் 26ம் தேதி, 77வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் குடியரசு தின விழாவிற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், குடியரசு தினவிழா 26ம் தேதி காலை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவிற்கான முன்னேற்பாடுகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. மேலும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காங்கள் சுத்தப்படுத்தும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மூலம் புல் தரை சீரமைக்கப்பட்டு, பூங்கா புதிய பொலிவு பெற்றுள்ளது. குடியரசு தினவிழா நடைபெறும் மைதானத்தில் போலீசார் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.

விழாவின் போது நடைபெறும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஒத்திகை, கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி, நேற்று மைதானத்தில், கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. குடியரசு தினவிழாவையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனில், 24 மணி நேரமும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில், கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு இரவு முழுவதும் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு காவல்துறையின் சேவையை உடனடியாகவும் திறம்படவும் வழங்கும் நோக்கிலும், குற்றத் தடுப்பு பாதுகாப்பு பணிகளை வலுப்படுத்தும் வகையிலும், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நேற்று தனிப்படை போலீசாருக்கு வழங்கப்பட்டது. இந்த மோட்டார் சைக்கிள்களை ஏடிஎஸ்பி அண்ணாதுரை, ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி, ஆகியோர் தனிப்படை போலீசாருக்கு வழங்கினார்கள். இந்த வாகனத்தில் முதலுதவி பெட்டி, கண்காணிப்பு கேமரா, பெரிய லத்தி, டார்ச்லைட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த இருசக்கர வாகனத்தின் மூலம் காவல்துறையின் விரைவு நடவடிக்கை மேலும் மேம்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என ஏடிஎஸ்பி அண்ணாதுரை தெரிவித்தார்.

Tags : Republic Day ,Namakkal ,77th Republic Day ,
× RELATED 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு