நன்றி குங்குமம் தோழி
‘‘எனக்கும் சுந்தரி சில்க்ஸுக்கும் 20 வருட பந்தம். அந்த உறவுதான் அவர்களுக்கென தனிப்பட்ட டிசைன் புடவைகளை உருவாக்க காரணமாக அமைந்துள்ளது’’ என்றார் பிரபல உடை அமைப்பாளர் மற்றும் டிசைனர் நவுஷத் அலி.இவர் தற்ேபாது சுந்தரி சில்க்ஸுடன் இணைந்து புது ரக டிசைன் புடவைகளை இன்றைய தலைமுறை பெண்களுக்காக வடிவமைத்துள்ளார். நவுஷத் அலி ஆண்களின் உடைகளை டிசைன் செய்வதில் கைதேர்ந்தவர். இவரின் டிசைன்கள் அனைத்து தலைமுறையினரும் அணியும் வகையில் இருக்கும். புதுச்சேரியில் இயங்கி வரும் இவரின் டிசைனர் பொட்டிக் கடையில் தற்போது பெண்களுக்கான உடைகளையும் வடிவமைத்து வருகிறார்.
‘‘நான் டிசைனிங் கல்லூரியில் படிக்கும் போது என்னுடைய பிராஜக்டுக்கு ராஜாராம் சார்தான் ஸ்பான்சர் செய்தார். அதுதான் நான் வடிவமைத்த முதல் ஆண்களுக்கான டிசைனர் உடை. அதற்கு எனக்கு விருதும் கிடைத்தது. அதை நான் ராஜாராம் சாரிடம் காண்பித்து ஆசீர்வாதம் பெற்றது மட்டுமில்லாமல் என்னுடைய அந்த டிசைனை அவர்களுக்ேக அர்ப்பணித்து விட்டேன்.
அதன் பிறகு நான்கு வருடம் கழித்து மன்மோகன் ராம் மற்றும் அவரின் மனைவி பவித்ரா இருவரும் புதுச்சேரியில் உள்ள என் பொட்டிக்கில் என்னை சந்திக்க வந்தார்கள். அப்போது ஆண்களுக்கான சிறப்பு கலெக்ஷன் ஒன்றை 2021ல் வெளியிட்டோம். சில காலம் கழித்து நான் சென்னையில் அவர்களின் கடைக்குச் சென்றிருந்தேன். அங்கு அவர்களின் பாரம்பரிய புடவைகளை பார்த்து வியந்து போனேன். பெண்களுக்கான புடவை கலெக்ஷன் செய்து தர விரும்புவதாக விளையாட்டாக நான் சொன்னது இன்று நிஜமாகி இருக்கிறது’’ என்றவர் தான் வடிவமைத்த புடவைகள் குறித்து பகிர்ந்தார்.
‘‘முதலில் காஞ்சிபுரம் பட்டில்தான் டிசைன் செய்தேன். ஆனால், அது சரியாக இல்லை. அதனால் பனாரஸ் பட்டில் டிசைன் செய்ய திட்டமிட்டோம். அதில் பல புது நிறங்கள் மற்றும் டிசைன்களை கொடுக்க முடிவு செய்தோம். நானும் மன்மோகன் சாரும் பனாரஸ் சென்று அங்குள்ள நெசவாளர்களை சந்தித்து டிசைன்கள் குறித்து ஆய்வு செய்து வடிவமைத்தோம். ஒவ்வொரு புடவையிலும் தமிழ்நாட்டு பாரம்பரியத்தின் அடையாளமான கொலுசு, மல்லிப்பூ, நெத்திச்சுட்டி, கோயில் சடங்குகள், தமிழ் பஞ்சாங்கம் போன்றவற்றை பார்க்கலாம். பஞ்சாங்கம் சார்ந்த நிலா, நட்சத்திரம், சூரியன் போன்றவற்றை அழகான கவிதைப் போல் புடவையில் டிசைன் செய்திருந்தேன்.
பொதுவாக ஒரு சின்ன டிசைன் புடவையில் 5 இஞ்ச் அளவில்தான் இருக்கும். அதையே புடவை முழுக்க கொண்டு அமைத்திருக்கிறோம். மாடர்ன் மற்றும் பாரம்பரியம் இரண்டின் கலவைதான் இந்த கலெக் ஷன். இரண்டு வருஷ உழைப்பின் அடையாளம்தான் இது. இதனைத் தொடர்ந்து வேறு புது ரக புடவைகளையும் அறிமுகம் செய்யும் திட்டமுள்ளது’’ என்றவர் கடந்த பத்து வருடமாக இந்த துறையில் இருந்து வருகிறார்.
மன்மோகன் ராம், நிர்வாக இயக்குனர்
‘‘நாங்க நவுஷத்துடன் இணைந்து முதலில் ஆண்களுக்கான ஷர்ட் டிசைன் செய்தோம். அதுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு எங்க கடைக்கு வந்தவர் புடவை கலெக்ஷன் ஒன்று செய்யலாம்னு கேட்டார். எங்களுடையது புடவை பெரும்பாலும் பாரம்பரிய டிசைன் கொண்டது. ஒவ்வொன்றையும் நாங்க தனிப்பட்ட முறையில் டிசைன் செய்கிறோம். பாரம்பரியத்தில் சமகால டிசைன்களை கொண்டு வந்தால் என்ன என்று யோசித்த போதுதான் இன்றைய தலைமுறையினர் எளிதாக அணியக்கூடியதாகவும், அழகான டிசைன்கள் கொண்ட புடவையினை வடிவமைக்க முடிவு செய்தோம்.
பனாரஸில் எங்களின் நெசவாளர்களை சந்தித்து பேசினோம். பேஸ்டல் நிறங்கள் மட்டுமில்லாமல் நம்முடைய பாரம்பரிய நிறங்களையும் சேர்த்து அழகான கலெக்ஷனாக கொண்டு வந்திருக்கிறோம். ஒவ்வொரு டிசைனும் மூன்று நிறங்களில் கொடுத்திருக்கிறோம். இந்தப் புடவைகள் தற்போது கடைகளில் விற்பனையில் உள்ளன. மேலும், இது போல் வேறு கலெக்ஷனும் கொண்டு வரும் எண்ணம் உள்ளது’’ என்றார்.
தொகுப்பு: ரிதி
