மயிலம், ஜன. 23: புதுச்சேரியில் இருந்து கூட்டேரிப்பட்டு செல்லும் சாலையில் மயிலம் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி, சோதனை நடத்தினர். அதில், புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், செஞ்சி தாலுகா மேல்மலையனூர் முருக்கந்தாங்கல் பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் பூபாலன் (19) என்பதும், புதுச்சேரி மது பாட்டில்களை அப்பகுதியில் விற்பனைக்காக கடத்தி கொண்டு சென்றதும் தெரிந்தது.இது குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிந்து, பூபாலனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 140 மது பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
