நன்றி குங்குமம் தோழி
‘‘என் அப்பாவின் பிசின ஸில் நான் இணைந்த போது எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. ஒரே பிசினஸை மட்டுமே செயல்படுத்திடக் கூடாது. அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று விரிவுப்படுத்த வேண்டும். அதன் உருவாக்கம்தான் குக்கூ’’ என்றார் நிவேதிதா. இவரின் முக்கிய நோக்கமே பல தொழில்முனைவோருக்கு குக்கூ மூலம் ஒரு அறிமுகத்தினை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதாம்.
‘‘நான் பல ஆண்டுகளாக ஓட்டல் துறையில்தான் பணியாற்றி வந்தேன். இந்தியாவின் பிரபல நட்சத்திர ஓட்டல்களில் விற்பனை துறையில் வேலை பார்த்திருக்கிறேன். என் அப்பா ஜப்பானின் பிரபல செராமிக் மற்றும் போர்சிலீன் பாத்திர நிறுவனமான நோரிடகேயின் பொருட்களை இங்கு இறக்குமதி செய்து விநியோகம் மற்றும் விற்பனை செய்து வந்தார். எனக்கு விற்பனை துறையில் அனுபவம் இருந்ததால், அப்பாவுடன் பிசினஸில் 2017ல் இணைந்தேன்.
அப்போதுதான் எனக்கு ஒரே பிராண்டினை மட்டுமே விற்பனை செய்யாமல், பல பிராண்டுகளை அறிமுகம் செய்யலாம்னு தோன்றியது. அதனடிப்படையில் ‘சோபே டெகார்’ என்ற பெயரில் கடை ஒன்றை நிறுவினேன். இங்கு மேசை மேல் வைக்கப்படும் பாத்திரங்கள், மேசை விரிப்புகள் என பிரபல பிராண்டுகளை விற்பனை செய்ய ஆரம்பித்தேன். இவை எல்லாமே லக்சுரி பிராண்டுகள். பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தோம். சென்னை மட்டுமில்லாமல் ஐதராபாத், பெங்களூர், குர்கான் என எங்களுக்கு நான்கு கிளைகள் உள்ளன.
சென்னை கிளைதான் நாங்க முதலில் ஆரம்பித்தது என்பதால் அப்பா காலத்தில் இருந்தே அதில் எந்தவித மாற்றங்களும் செய்யாமல் இருந்தது. அதனால் அதன் உள்கட்டமைப்பில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்ய விரும்பினேன். அப்பதான் எனக்கு ‘குக்கூ’ அமைக்கும் ஐடியா வந்தது.நாங்க விற்பனை துறையில் பல ஆண்டுகளாக இருந்து வந்ததால் எனக்கு மார்க்கெட்டில் உள்ள தொழில்முனைவோர்களின் அறிமுகம் இருந்தது. துணி பிசினஸ், உணவுத் தயாரிப்பு, கேக் பிசினஸ் என பலரும் பலவிதமான பிசினஸ்களை செய்து வருகிறார்கள். அவர்களிடம் பேசிய போது தங்களுக்காக ஒரு கடை அமைக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதை புரிந்து கொண்டேன். மேலும், அவர்கள் அப்போதுதான் இந்தத் தொழிலில் வந்திருப்பார்கள். அதனால் உடனடியாக அவர்களால் கடையினை அமைக்க முடியாமல் இருந்தது. இவர்களுக்கு நாம் ஏன் ஒரு தளம் அமைத்து தரக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணம் தான் குக்கூவாக மாறியது’’ என்றவர் அதன் செயல்பாட்டினை குறித்து விவரித்தார்.
‘‘பொதுவாக சில்லறை விற்பனை செய்வது அவ்வளவு சுலபமில்லை. நான் இந்த துறையில் பல வருடம் இருப்பதால், அதில் உள்ள கஷ்டங்கள் மற்றும் சிரமங்களை அறிந்திருக்கிறேன். நாம் நினைப்பது போல் உடனடியாக விற்பனை அமைந்துவிடாது. ெபாறுமை ரொம்ப முக்கியம். ஸ்டால் அமைத்து ஒருநாள் மட்டுமே விற்பனை பார்க்க முடியாது. தொடர்ந்து விற்பனை இருந்தால்தான் பிசினஸ் நடத்த முடியும். இந்த வாய்ப்பு மூலம் அவர்களுக்கும் பிசினஸ் எவ்வாறு செய்யலாம் என்ற புரிதல் ஏற்படும். கடந்த ஆண்டு மட்டுமே 30 தொழில்முனைவோருக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். அதில் ஒருவர் தற்போது சொந்தமாக கடை ஒன்றை துவங்கி சக்சஸாக இயங்கி வருகிறார்.
இப்போது எல்லோரும் இன்ஸ்டாவில் பிசினஸ் செய்கிறார்கள். அவர்களை பார்த்து தேர்வு செய்வோம். மேலும், சென்னையில் கண்காட்சி மற்றும் ஸ்டால்கள் அமைத்திருந்தால் அங்கு சென்றும் பார்ப்போம். அதில் மிகவும் வித்தியாசமான பொருட்களை வைத்திருப்பவர்களை தேர்வு செய்வேன். எனக்கு தரம்தான் முக்கியம். மேலும், எங்களின் எதிர்பார்ப்பிற்கு அவர்கள் பொருத்தமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
அதன் பிறகு அவர்களின் தயாரிப்புகளை எங்களின் கடையில் விற்பனைக்காக வைப்போம். அதுவும் மூன்று மாதங்கள்தான் வைத்திருப்போம். சிலர் நீடிக்க விரும்புவார்கள். அவர்களுக்கு மேலும் ஒன்றிரண்டு மாதங்கள் வாய்ப்பு தருவோம். காரணம், நிறைய பேருக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும். ஒரே பொருட்களை விற்பனை செய்யாமல், பல பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தும் போது தான் தனித்துவமாக தெரியும்’’ என்றவர், இலங்கை அகதிகள் தயாரிக்கும் ஃபேன்ஸி நகைகள் மற்றும் கொடைக்கானல் பெண்கள் தயாரிக்கும் தச்சு வேலைப்பாடுகள் கொண்ட பொருட்களையும் விற்பனைக்காக வைத்துள்ளார்.
‘‘மேலும், இது கண்காட்சிக்கூடம் கிடையாது. எங்களின் கடையில் அவர்களின் பொருட்கள் வைக்கும் முன் நாங்க அதன் தரம் அனைத்தும் ஆய்வு செய்வோம். அதன் பிறகு அவர்களின் பொருட்களை எங்களுக்கு அனுப்பினால் போதும். அதனை நாங்க எங்க கடையில் விற்பனைக்காக வைத்திடுவோம். அவர்கள் இங்கிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும், இவர்களின் பொருட்களை நாங்க எங்க கடையில் தனிப்பட்ட முறையில் அமைப்பது மட்டுமில்லாமல், அது பற்றி சின்னக் குறிப்பும் கொடுத்திருப்போம். இதனால் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் முன் அது பற்றி தெரிந்து கொள்ளவும் முடியும். சிலர் ஒரு வருடம் கழித்து வேறு புது பிராண்டுகளை அறிமுகம் செய்வார்கள். அப்போது அதற்காக மீண்டும் ஒரு வாய்ப்பினை நாங்க அளிக்கவும் தயாராக இருக்கிறோம்.
தற்ேபாது நான்கு கிளைகளில் செயல்பட்டு வருகிறோம். மேலும், எங்களுடன் பிசினஸ் செய்தவர்களுக்கு எங்களின் மற்ற கிளைகளிலும் வாய்ப்பு தர இருக்கிறோம். அதன் மூலம் அவர்களுக்கு பான் இந்தியா அறிமுகம் கிடைக்கும். அடுத்து நிறைய வர்க்ஷாப்கள் செய்ய இருக்கிறோம். உதாரணத்திற்கு கலை நிகழ்வுகள், உணவுத் திருவிழாக்கள், டேபிளை அலங்கரிப்பது போன்றவற்றை நிகழ்த்த இருக்கிறோம். மேலும், இங்கு அவர்களின் பொருட்களை வைக்கவும், விற்பனையாகும் பொருட்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கட்டணமாக பெற்றுக் கொள்வோம். இதில் நகை, மேக்கப், உடைகள் போன்ற பொருட்கள் எளிதில் விற்பனையாகிவிடும். கலை மற்றும் டாய்லட்டரி சார்ந்த பொருட்கள் விற்பனையாக தாமதமாகும்’’ என்றார் நிவேதிதா.
தொகுப்பு: ஷன்மதி
