நன்றி குங்குமம் தோழி
சிவ வாத்தியம் என்பது சிவபெருமானுக்காக சிவனடியார்களாலும், சிவ பக்தர்களாலும் வாசிக்கப்படுகிற இசைக்கருவி. சிவாலயங்களில் சுவாமி வழிபாடு, திருவீதியுலா மற்றும் திருமுறை ஊர்வலங்கள், திருவாசகம் முற்றோதல், திருக்கோயில் குடமுழுக்குகள் போன்ற திருவிழாக்காலங்களில் சிவ வாத்தியங்கள் வாசிக்கப்படுவதை பார்த்திருப்போம்..!
இவ்வாத்தியம் தாளம் மற்றும் சந்தத்தின் அடிப்படையில் வாசிக்கப்படுகிறது. யாரும் எளிதாக கற்றுக்கொள்ள முடியும். ஆனால், வாசிப்பது கொஞ்சம் கடினம். ஆர்வமும் தொடர் முயற்சி, இறையருள் இருந்தால் மட்டுமே சிவ வாத்தியம் வாசிக்க முடியும். சென்னை பெரும்பாக்கம் பெரும்பாக்கேஸ்வரர் திருக்கோயிலில் மகாசிவராத்திரி நாளன்று அப்பேர்ப்பட்ட தெய்வீகத் தன்மையுடைய சிவ வாத்தியத்தை பெண்கள் வாசிப்பதை பார்த்ததும் அதிசயமும் ஆச்சர்யமும் பீறிட்டுக் கொண்டது.
அதில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மட்டுமில்லாமல் வேலைக்குச் செல்லும் பெண்களும் இருந்தார்கள். அவர்களை சந்தித்த போது, கல்லூரி மாணவியான சௌந்தர்யா பேசத் தொடங்கினார். ‘‘எனது சிறுவயது முதலே கயிலாய வாத்தியம் கற்று வருகிறேன். நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது என் வீட்டுப் பக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் கயிலாய வாத்தியம் வாசிப்பதை பார்த்திருக்கிறேன். அதிலிருந்து எழுப்பப்படும் இசை என்னை கவர்ந்தது. அதனால் அதை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். இன்று நான் கோயில்களில் வாசிக்கும் போது எல்லாம் ஈசன் என் முன் நடனமாடுவது போல் உணர்கிறேன். இதற்கு மூலக்காரணம் என் குருநாதர் ஜீவானந்தம் அவர்கள்தான்’’ என்றவரை தொடர்ந்தார் இலக்கியா சுரேஷ்.
கல்லூரி மாணவியான இலக்கியாவும் தன்னுடைய ஏழாம் வகுப்பில் இருந்துதான் கயிலாய வாத்தியத்தை பயில துவங்கியுள்ளார். ‘‘ஏழாம் வகுப்பு கோடை விடுமுறையின் போதுதான் ஜீவானந்தம் ஐயா அவர்களிடம் பயிற்சி பெற ஆரம்பித்தேன். என்னுடைய விருப்பத்தை புரிந்து கொண்டு என் அம்மாவும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். ஒவ்வொரு முறையும் வாசிக்க துவங்கும் போதும் அதில் இருந்து எழும் இசை என்னுடைய மனக்கவலை அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டதாக உணர்வேன்’’ என்றார்.
‘‘நான் கடந்த பத்து வருடங்களாக கயிலாய வாத்தியம் இசைக்கிறேன்’’ என்று பேசத் துவங்கினார் அஸ்வினி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் இந்த வாத்தியத்தை தன்னுடைய உயிராக நினைத்து வாசித்து வருகிறார். ‘‘வாராகி அம்மன் கோயிலில்தான் ஜீவானந்தம் ஐயா அவர்களை சந்தித்தேன். அவர் இந்த வாத்தியம் வாசிக்கும் பயிற்சி அளித்தது குறித்து தெரியவந்ததும் நானும் அவரின் வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.
இது நம்முடைய மிகவும் பழமையான பாரம்பரியக் கருவி. அதைப் பற்றி பலருக்கு தெரிவதில்லை. கயிலாய வாத்தியம் வாசிப்பது ஒரு கலை. இதனை வாசிக்கும் போது மனதில் இறைவனை முழுமையாக உணர முடியும். ஜீவானந்தம் ஐயா அவர்களும் இந்த இசையினை பாரம்பரிய முறைப்படிதான் எங்க அனைவருக்கும் பயிற்றுவித்து தருகிறார்’’ என்றவரை தொடர்ந்தார் முதலாமாண்டு கல்லூரியில் படிக்கும் பூஜா.
‘‘திருச்சிற்றம்பலம் அருள்மிகு உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார் திருவருளாலும், தில்லை ஆனந்தக்கூத்தனின் திருவருளாலும் இப்பிறவியில் கிடைத்த பொக்கிஷம்தான் இந்த திருக்கயிலாய வாத்தியம். சித்தாலப்பாக்கத்தில் அகத்தீஸ்வரர் திருக்கோயிலில்தான் திருக்கயிலாய வாத்திய பயிற்சியை அனைவருக்கும் இலவசமாக கற்றுத் தருவது பற்றி கேள்விப்பட்டுதான் நானும் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன்.
பார்க்க வித்தியாசமாக இருந்த இந்த வாத்தியத்தை வாசித்த போது என்னையே மறந்து போனேன். மனதில் இருந்த கவலைகள் எல்லாம் பனி போல் விலகியதாக உணர்ந்தேன். வாரத்தின் ஒரு நாள்தான் பயிற்சி என்பதால், எந்த வேலையாக இருந்தாலும் பயிற்சிக்கு செல்வதை நிறுத்தமாட்டேன். சில சமயம் என் உடல் அதற்கு ஈடு கொடுக்காத நேரத்திலும் என் குருதான் என்னை உற்சாகப்படுத்தி வாசிக்க வைப்பார்’’ என்றார்.
‘‘சிறு வயது முதலே இவ்வாத்தியம் கற்று வருகிறேன். மூன்றாவது படிக்கும் பொழுது என் வீட்டருகில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் கயிலாய வாத்தியம் வாசிப்பதைப் பார்த்திருக்கிறேன்’’ என்று பேசத் துவங்கினார் +2 மாணவியான டிஷிதா.‘‘நானும், எனது சகோதரி, சகோதரர் மூவரும் கற்று வருகிறோம். இன்று பல கோயில்களுக்கு சென்று வாசித்தும் வருகிறோம்.
நான் ஒவ்வொரு முறை வாசிக்கும் போது அவன் என்னுள் இருப்பதை உணருகிறேன். இது நான் என் இறைவனுக்கு செய்யும் தொண்டு என்று தான் நினைக்கிறேன்’’ என்றார். பெண்களில் பெரும்பாலானவர்கள் வீணை போன்ற வாத்தியம் வாசிக்கத்தான் விரும்புவார்கள். ஆனால், அவர்களுக்கு திருக்கயிலாய வாத்தியத்தை கடந்த பத்து வருடங்களாக கற்றுத் தந்து வருகிறார் ஆதிமுதலோன் சிவபூதகணங்கள் திருக்கயிலாய வாத்திய அறக்கட்டளையின் நிறுவனர் ஜீவானந்தம்.
‘‘கடந்த 2017ம் ஆண்டுதான் இந்த அறக்கட்டளை மூலம் நான் சிவ வாத்தியம் கற்க விரும்புபவர்களுக்கு இலவசமாக சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். இதுவரை 205க்கும் மேலானவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். எனது மாணவிகள் என்று சொல்வதை விட எனது மகள்கள் என்றுதான் இவர்களை ெசால்ல வேண்டும். வாரத்தில் ஒருநாள்தான் பயிற்சி என்றாலும், அந்த ஒரு நாளில் இவர்கள் வாத்தியத்தை வாசிக்க கற்றுக் கொள்கிறார்கள் என்றால் அனைவருமே திறமைசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும். பூஜா மற்றும் இலக்கியா இருவரும் 15 நாட்களில் கற்றுக் கொண்டு விட்டார்கள்.
திருக்கயிலாய வாத்தியங்கள் குறித்து பன்னிரு திருமுறைகள், கந்தபுராணம், திருப்புகழ், திருமுருகாற்றுப்படை போன்ற பல்வேறு நூல்களில் குறிப்புகள் உள்ளது. காரைக்கால் அம்மையார் 11 திருமுறையில் ‘துத்தங் கைக்கிள்ளை’ எனத் தொடங்கும் பாடல் வாயிலாக இக்கருவிகளை பற்றி சொல்லியிருக்கிறார். காலப்போக்கில் இந்த வாத்திய இசைக்கருவிகள் மறைந்தாலும் மீண்டும் இவைகள் புத்துயிர் பெற்று வருகிறது. இது போன்ற இசைக்கருவிகள் பெரும்பாலும் சிவாலயங்களிலும் மற்ற திருக்கோயில்களிலும் இசைக்கப்படுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை என அனைவரும் ஆர்வத்துடன் இதனை கற்க ஆர்வமாக உள்ளனர்.
இசைக்கருவிகளை இசைக்கும் போது இனம்புரியாத ஒரு ஆத்ம திருப்தி உண்டாவதையும் அதன் ஓசை மற்றவர்களை மிகவும் கவர்வதையும் யாரும் மறுக்க முடியாது. ஆனால், இந்த இசைக்கருவிகளை முறையாக பயிற்சி பெற்றுதான் வாசிக்க வேண்டும். காலப்பிரமாணம் மற்றும் தாளப்பிரமாணம் இன்றி இசைக்கும் போது இதிலிருந்து வெளியாகும் நாதம் இரைச்சலாக கேட்க வாய்ப்புகள் உள்ளது.
2023ல் சென்னை மேகநாதேஸ்வரர் திருக்கோயில் மற்றும் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவிலும் எனது மாணவர்கள் 140 பேர் ஒரே நேரத்தில் இக்கருவியை வாசித்தார்கள். இதுவரை வேறு யாரும் இவ்வாறு செய்தது இல்லை. பாரம்பரியமான திருக்கயிலாய வாத்தியக் கலைஞர்களுக்கு இது வரை தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழக அரசு இக்கலைஞர்களையும் ஆதரித்து மற்ற கலைஞர்களுக்கு வழங்குவது போல் உரிய அங்கீகாரமும் விருதுகளும் இவ்வாத்தியம் வாசிக்கும் கலைஞர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார் ஜீவானந்தம்.
தொகுப்பு: மதுரை ஆர்.கணேசன்
