×

ஃப்ளோரல் ஸ்கெர்ட் தயாரிப்பில் சேலத்துப் பெண்!

நன்றி குங்குமம் தோழி

கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க..! ஒரு பெண் பொம்மை மாதிரி டிரஸ் பண்ணி நிக்கிறாங்க. அவங்க கையில இருக்கற மெல்லிய நூலை (String) மெதுவாக இழுத்ததும், அவங்க போட்டுருக்கற நீளமான ஸ்கெர்ட் பல வண்ணங்களில் பெரிய பூ மாதிரி சட்டுனு விரியுது. இது பார்க்க ஒரு மேஜிக் மாதிரியே இருக்கு.இந்த யோசனை எப்படி உருவாச்சு? சேலத்துல சின்ன யூனிட்ல செய்யுற ஒரு ஆடை அட்லாண்டிக் கடலைத் தாண்டி, அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில் போன்ற நாடுகளில் நடக்கும் கார்னிவெலுக்கு எப்படி போச்சு? என்கிற கேள்விகளோடு ஆடை வடிவமைப்பாளர் ஜெயஸ்ரீ யிடம் பேசியதில்…

‘‘என் கணவரோடு இணைந்து கிட்டத்தட்ட 15 வருடமாக இந்த கார்மெண்ட் இண்டஸ்ட்ரிய நடத்தி வருகிறேன். அவரும் நானும் டெக்ஸ்டைல் துறையில டிப்ளமோ முடித்தவர்கள். பிறகு மூணு மாசம் பேசிக் ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் ஒன்றையும் முடித்தேன். கூடவே, பியூட்டிஷியன் கோர்ஸ், பிரைடல் மேக்கப்னு பல்வேறு விஷயங்களையும் ஆர்வமுடன் கற்று என்னை அப்டேட் செய்துகொண்டேன். தொடக்கத்தில் ஸ்கூல், காலேஜ் கலை நிகழ்ச்சிகளுக்குத் தேவைப்படும் ஆடைகளைத்தான் தயாரித்து கொடுத்துக் கொண்டிருந்தோம்.

இந்த நிலையில்தான், சேலத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து, இன்டர்நேஷனல் மாடல் ஒருவரது ஸ்கெர்ட் ஒன்றின் புகைப்படத்தை என்னிடம் காட்டி, இது மாதிரியே அப்படியே உருவாக்கித்தர முடியுமான்னு கேட்டாங்க.முதலில் முடியாதென மறுத்தாலும், அந்தப் புகைப்படம் என் மனசுல அப்படியே நின்னது. ஏன் முடியாது? என்ற கேள்வியும் பின்தொடர, ஒரு போட்டோவை மட்டுமே வைத்து இவ்வளவு நுணுக்கமான விஷயத்தை உருவாக்குவது கடினம்தானே என முதலில் யோசித்தேன்.

ஆனாலும், அந்த ரஷ்ய மாடல் ஆடை போட்டோ என் கண்களில் பட்டதில் இருந்தே, கண்டிப்பாக இந்த உடையை என்னால் தயாரித்துவிட முடியும் என்கிற நம்பிக்கை உருவாக ஆரம்பித்தது. சோதனை முயற்சியாக, சின்னக் குழந்தைங்களுக்கு இந்த ஃப்ளோரல் ஸ்கெர்ட்டை நான் தயாரிக்க, அது வெற்றியும் பெற்றது. அவற்றை வீடியோவாக்கி சோசியல் மீடியாக்களில் பதிவேற்ற தொடங்கினேன்.

என்னோட வெற்றிக்கு முழு காரணம் சமூக ஊடகங்கள்தான். என் தயாரிப்பு ஃப்ளோரல் உடை வெளிநாட்டு ஈவென்ட் மேனேஜர்ஸ கவர்ந்ததுக்கு காரணம் பின்ட்ரஸ்ட் (Pinterest) வலைத்தளம். வெளிநாடுகள்ல குறிப்பா கிரியேட்டிவ் துறையில இருக்கறவங்க இதையே அதிகம் பார்ப்பாங்க. அப்படித்தான், ஜெர்மனில இருக்கற ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் யுனிக்கான கார்னிவெல் காஸ்டியூம் ஐடியாஸ் தேடும்போது என்னோட வீடியோ கண்ணில் பட்டிருக்கு.

அமெரிக்காவில இருந்து முதலில் எனக்கு என்கொயரி வந்தப்போ, என்னால அதை நம்பவே முடியல. யாரோ விளையாடுறாங்கன்னுதான் முதலில் நினைச்சேன். ஆனா, அவங்க தொடர்ந்து என்னிடம் பேசி பேமென்ட், ஷிப்பிங் குறித்தெல்லாம் கேட்டபோதுதான், நிஜம்னு புரிந்தது. முதலில் இரண்டு ஸ்கெர்ட் மட்டும் வாங்கியவர்கள், எங்க குவாலிட்டி சூப்பரா இருக்கென, அடுத்த முறையே எட்டு ஸ்கெர்ட்களை ஆர்டர் கொடுத்தார்கள்.

ஆரம்பத்தில் மொழி, பேமென்ட் கேட்வேஸ், இன்டர்நேஷனல் ஷிப்பிங் விதிகள்னு சில நடைமுறைச் சிக்கல்கள் எங்களுக்கு இருந்தது. அதையெல்லாம் ஒவ்வொன்றாக கடந்து முதல் ஆர்டரை வெற்றிகரமா அனுப்பி வைத்தோம். இப்ப வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் திரும்பத் திரும்ப எங்களுக்கு ஆர்டர் கொடுப்பது, என் குவாலிட்டிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே நினைக்கிறேன்.

அந்த ஃப்ளோரல் ஸ்கெர்ட்டின் உச்சமே, நீள வடிவ பாவாடை பூ மாதிரி விரிகிற விதத்திலதான் இருக்கு. அந்தப் பாவாடையின் ஸ்பெஷாலிட்டியே அதுதான். அதுல டெக்னாலஜி எதுவும் வச்சிருக்கீங்களா’’ என புன்னகைத்தபடி நாம் கேள்வி எழுப்பியதில்?

சிரித்தவர். ‘‘இல்ல இல்ல. இது முழுக்க முழுக்க கணக்கீடு சம்பந்தப்பட்டது. அதாவது, துணியோட எடை, அது விரிகிற தன்மை, ஒவ்வொரு மடிப்போட கோணம், அப்புறம் கடைசியா உடையில் உள்ள வளையத்தோட இழுவிசை. இந்த நான்கு விஷயமும் ஒரு மில்லி மீட்டர் மாறாம சரியான விகிதத்தில் சேரணும். கொஞ்சம் பிசகினாலும் பூ மாதிரியாக விரிகிற வடிவம் வராது. சரியாச் சொல்லணும்னா டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் மாதிரிதான் இதுவும்.

நாங்கள் நடத்துவது சின்ன யூனிட்தான். சுமார் 10 தையல் மெஷினோட 6 முதல் 10 பெண் ஊழியர்களை வைத்தே நடத்துகிறோம். வேலை அதிகரிக்கும்போது மட்டும் கூடுதல் ஆட்களை நியமிக்கிறோம். ஒரு ஆடையை தயாரிக்க நாலு பேர் கொண்ட டீமுக்கு எட்டு மணி நேரம் இதற்குத் தேவைப்படுது. இது ஊழியரோட முழுமையான ஒருநாள் உழைப்பு.

தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் அனைத்தையும் தரம் பார்த்து சேலத்திலேயே வாங்குகிறோம். டெய்லர்ஸ் ஸ்கெர்ட்டை தைத்து முடித்ததுமே, ஃபினிஷிங் வரை, ஒவ்வொரு ஸ்டெப்பாக நானே நேரில் நின்று கண்காணிக்கிறேன். ஆடையை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைப்பதற்கு முன்பு, பலமுறை சோதித்து தரம் பார்த்த பிறகே அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பவெல்லாம் வெட்டிங்ஸ் ரொம்பவே கிராண்டா பண்றாங்க.

இந்தியாவை பொறுத்தவரை, திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளே இந்த உடைக்கான மிகப்பெரிய மார்க்கெட். மணமக்களை வரவேற்கிற டான்சர்ஸ் இதை பயன்படுத்தும் போது அந்த நிகழ்ச்சிக்கு பிரம்மாண்டமான தோற்றம் கிடைக்கிது. குறிப்பாக சூரத், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லின்னு வடஇந்திய மாநிலங்களில் இருந்தே ஆடைக்கான ஆர்டர்ஸ் நிறைய வருது.

தவிர, ஃபேஷன் ஷோவுக்காக டிசைனர்ஸ் சிலர் வாங்குறாங்க. கரகாட்டம் மாதிரியான பாரம்பரிய நடனக் கலைஞர்களும், தங்களோட நிகழ்ச்சியில் புதுமையைக் கொண்டு வர நினைத்து, இந்த உடைகளை அதிகம் வாங்குறாங்க. ஃப்ளோரல் ஸ்கெர்ட்ஸ் மட்டுமின்றி, நிகழ்ச்சிகளில் டான்சர்ஸ் பயன்படுத்துகிற எல்.இ.டி.விங்ஸ், ஏஞ்சல் விங்ஸ் மாதிரியான பொருட்களையும் நாங்கள் தயாரித்து தருகிறோம். பள்ளி, கல்லூரி கலை நிகழ்ச்சிகளுக்கான செட் பிராபர்டிகள் பலவற்றையும் நாங்கள் தயாரித்து வழங்குகிறோம்.

விடாமுயற்சி, ஆர்வம், தரம் மூன்றும் உள்ளூர் தொழிலை எப்படி சர்வதேச தரத்துக்கு கொண்டு போகும் என்பதற்கு நானே சிறந்த உதாரணம். நம்மிடம் உள்ள திறமையை சரியான தளத்தில் பகிர்ந்தால், ஒரு சின்ன ஊரில் இருந்து கொண்டும் உலகச் சந்தையில ஆதிக்கம் செலுத்த முடியும்’’ என்றவாறே புன்னகைத்தபடி விடைபெற்றார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Tags : Saffron ,
× RELATED திருக்கயிலாய வாத்தியம் இசைக்கும் பெண்கள்!