உடுமலை, ஜன. 22: தமிழகத்தில் மக்கள் தொகை மற்றும் பரப்பளவு அதிகமாக உள்ள ஊராட்சிகளை 2 ஆக பிரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கருத்துரு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் இருந்தும் தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஆண்டியகவுண்டனூர், போடிப்பட்டி, தேவனூர்புதூர், கண்ணம்மநாயக்கனூர், கணக்கம்பாளையம், பெரியகோட்டை ஆகிய 6 ஊராட்சிகள் நிர்வாக நலன் கருதி 2 ஆக பிரிக்கப்பட உள்ளன.
இந்த ஊராட்சிகள் மக்கள் தொகை மற்றும் பரப்பளவு அடிப்படையில் பெரியதாக இருப்பதால், பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தொலைதூரங்களில் உள்ள கிராம மக்கள், புதிய ஊராட்சியை எளிதில் அணுக முடியும். மக்கள் நலத்திட்டங்களையும் எளிதில் பெற முடியும். இதேபோல், குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி உட்பட 2 ஊராட்சிகளையும் பிரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
