×

திருப்பதியில் வரும் 25ல் ரதசப்தமியையொட்டி விஐபி, சிறப்பு தரிசனங்கள் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 25ம் தேதி ரதசப்தமி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று மாவட்ட மற்றும் தேவஸ்தான அதிகாரிகளுடன் துறைவாரியாக செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், கூடுதல் செயல் அலுவலர் வெங்கைய சவுத்ரி ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

அப்போது செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பேசியதாவது: ‘மினி பிரமோற்சவம்’ என அழைக்கப்படும் ரதசப்தமி நாளில் கோயிலின் நான்கு மாட வீதிகள், வரிசைகள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பக்தர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். ரதசப்தமி நாளில் பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு கூடுதலாக 5 லட்சம் லட்டுகளை இருப்பு வைத்திருக்க வேண்டும்.

வரும் 25ம் தேதி ஆர்ஜித சேவை, சிறப்பு தரிசனங்கள், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சஹஸ்ர தீபாலங்கார சேவைகள், வெளிநாடுவாழ் இந்தியர்கள், 1 வயது குழந்தைகளின் பெற்றோர், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் வரும் 24 முதல் 26ம் தேதி வரை திருப்பதியில் வழங்கப்படும் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது. எனவே ஜனவரி 24ம் தேதி வி.ஐ.பி. தரிசனங்களுக்கு எந்த பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது என்றார்.

Tags : Rathasapthami ,Tirupati ,Devasthanam ,Tirumala ,Tirupati Ezhumalaiyan temple ,Anilkumar Singhal ,Venkaiah Chowdhury ,Annamayya Bhavan ,
× RELATED பெரும்பாலான கட்சிகள் கூட்டணிக்கு...