வேலூர், ஜன.22: தமிழக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணிக்கு வரும் 25ம்தேதி நடைபெற உள்ள தேர்வுக்கு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் எம்ஆர்பி வெளியிட்டது. மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ துறையில் 182, ரேடியோலஜி பிரிவில் 37, தடய அறிவியல் 50, முதியோர் மருத்துவம் 10, இருதய அறுவை சிகிச்சை 20 என மொத்தம் 299 காலியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு முதுகலை எம்டி, எம்எஸ், டிஎன்பி, எம்சிஎச் உள்ளிட்ட சிறப்பு படிப்புகளில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டது. தொடர்ந்து ஏராளமாமான மருத்துவர்கள் விண்ணப்பித்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் எழுத்து தேர்வுக்கான தேதியை எம்ஆர்பி அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 25ம்தேதி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தமிழ்மொழி தகுதித்தேர்வும், 3.15 மணி முதல் 5.15 மணி வரை முதன்மை பாடத்தேர்வும் நடைபெற உள்ளது. 50 மதிப்பெண்களுக்கு தமிழ்மொழி தகுதித்தேர்வும், 100 மதிப்பெண்களுக்கு முதன்மை பாடத்தேர்வும் நடக்கிறது. இதனிடையே தற்போது எழுத்து தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டு, எம்ஆர்பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது பயனாளர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மருத்துவ பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
