×

பாமக தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் முக்கிய முடிவு திமுக கூட்டணிக்கு பச்சைக்கொடி: விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் ராமதாஸ்

திண்டிவனம்: பாமக தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்க நிர்வாகிகள் பச்சைக்கொடி காட்டி உள்ளனர். கூட்டணி குறித்து முடிவு எடுத்து உள்ள ராமதாஸ், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். பாமக இரண்டாக உடைந்து உள்ள நிலையில், அன்புமணி தலைமையிலான பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து உள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமகவையும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சித்து வருகிறது.

ஆனால், அவர் திமுக கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை (23ம்தேதி) சென்னைக்கு வரும் நிலையில், அதற்குள் தேஜ கூட்டணியை இறுதி செய்யும் பணியில் பாஜ மேலிடம் ஈடுபட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைமை நிர்வாக குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாமக யாருடன் கூட்டணி என்பது குறித்தும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வந்துள்ள நிலையில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு நிர்வாகிகளிடமும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தார். அதாவது மற்ற கட்சிகளின் தற்போதைய நிலைப்பாடு?, உங்களது கருத்து என்ன? என தனித்தனியாக கேட்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதில் ஜி.கே.மணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திமுகவுடன் கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டியதாக தெரிகிறது. ஒருசிலர் மட்டுமே கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவற்றை மீட்டெடுக்க ஒன்றிய அரசின் ஆதரவு தேவை என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இருப்பினும் பெரும்பாலானோர் திமுக கூட்டணிக்கு குறித்து வலியுறுத்திய நிலையில் இதுபற்றி ராமதாஸ் உறுதியான முடிவு எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன. இருப்பினும் கூட்டணி விவகாரத்தில் அவசரம் காட்டாமல் மேலும் ஒரு வாரம் வரை காத்திருந்து பிப்ரவரில் புதிய கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ராமதாஸ் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

* ‘ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன்’
ஆலோசனை கூட்டத்துக்கு பின் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் நிருபர்களிடம் கூறுகையில், ‘யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம். அரசியலில் என்ன வேணாலும் நடக்கலாம். ராமதாஸ் மீது வழக்கு ஏதுமில்லை, யாரும் கட்டாயப்படுத்த முடியாது. தைலாபுரம் தோட்டத்தில்தான் கூட்டணி கையெழுத்தாகும். விசிக தலைவர் திருமாவளவனுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன். தமிழ்நாட்டில் ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளை திறந்தவர் ராமதாஸ். அருந்ததியர் சமுதாயத்துக்கு 3% இடதுக்கீட்டை பெற்றுத் தந்தவர் ராமதாஸ். வன்னியர்களையும், தலித் மக்களையும் 2 தண்டவாளமாக பார்த்துக் கொண்டிருப்பவர் ராமதாஸ். எங்களுக்கு யாரும் எதிரி இல்லை. எதிரியைத் தான் சமாதானப்படுத்த வேண்டும்.

திருமாவளவன் எங்களுக்கு அண்ணன். ராமதாசுக்கு திருமாவளவன் மகன் போல’ என்றார். இதன் மூலம் திருமாவளவன் அங்கம் வகித்தாலும், திமுக கூட்டணிக்கு செல்லவும் ராமதாஸ் தயாராக இருப்பதையே அருள் எம்எல்ஏவின் பேட்டி உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Palamaka CEO ,Dimuka alliance ,Ramadas ,Dindivanam ,Dimuga ,Bamaka ,Executive ,Committee ,Pamaka ,Anbumani ,
× RELATED சொல்லிட்டாங்க…