- பாஜக
- சட்டமன்ற உறுப்பினர்
- வாரணாசி
- கொல்கத்தா
- மேற்கு வங்கம்
- பாஜக
- ஹிரான் சாட்டர்ஜி
- கரக்பூர் சதர்
- அனிந்தா
கொல்கத்தா: மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ ஹிரண் சட்டர்ஜி முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலம் காரக்பூர் சதார் தொகுதி நடிகரான பாஜக எம்எல்ஏ ஹிரண் சட்டர்ஜி என்பவருக்கும், அனிந்திதா என்பவருக்கும் கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் தன்னிடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் தனது கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாக அனிந்திதா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நீண்ட காலமாகவே நான் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து வந்தேன். இருப்பினும் எனது மகள் மற்றும் குடும்பத்தினரின் நலனுக்காகவே இதுவரை அமைதியாக இருந்தேன். நாங்கள் சட்டப்படி பிரியவில்லை என்பதால் எனது கணவர் செய்து கொண்ட இரண்டாவது திருமணம் செல்லாது’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஹிரண் சட்டர்ஜியின் இரண்டாவது திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வாரணாசியில் உள்ள ஒரு நதிக்கரை படித்துறையில் நேற்று, ரித்திகா கிரி என்ற இளம் மாடல் அழகியை இந்து முறைப்படி ஹிரண் சட்டர்ஜி திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணம் சட்டவிரோதமானது என்று முதல் மனைவி அனிந்திதா போர்க்கொடி தூக்கியுள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாஜக எம்எல்ஏவின் இந்த தனிப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்து ஹிரண் சட்டர்ஜியோ அல்லது மாநில பாஜக தலைமையோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
