செங்கம், ஜன.21: அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயிலில் சென்னை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.செங்கம் நகரில் 1,600 ஆண்டுகள் மிகவும் பழமையான 18 சித்தர்களில் ஓருவரான அகத்தியரின் ஜீவசமாதி உடைய அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயில் மத்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரியின் தொடர் முயற்சியின் காரணமாக தமிழக அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து, கோயில் திருப்பணிகள் நிறைவடைந்தது.இதைத்தொடர்ந்து வரும் 28ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி கோயிலில் தஞ்சாவூர் அரண்மனை போன்ற முகப்பு நுழைவாயிலுடன் யாக சாலை மண்டபம் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அகத்திய சித்தர் ஜீவ சமாதி உடைய கோயில் என்பதால், கோயில் கருவறை உட்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்கள் என பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள், பண்டைய கால தமிழ் எழுத்துக்கள், ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று சென்னையில் இருந்து தொல்லியல் துறை அதிகாரி கலைசெல்வன் மற்றும் திருவண்ணாமலை தொல்லியல் துறை ஆய்வாளர் கருணாகரன் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் குழுவினர், தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் மற்றும் மூலவர் சன்னதி ஆகிய இடங்களில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், எழுத்துக்கள், ஓவியங்கள், சிற்பங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
