மார்த்தாண்டம், ஜன. 21 மார்த்தாண்டம் அருகே கோயில் அறையில் இருந்த வெள்ளி முக அங்கி திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மார்த்தாண்டம் அருகே ஆயிரம் தெங்கு தாணிவிளை பகுதியில் பத்ரகாளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தினசரி பூஜைகள் நடந்து வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன் கோயிலில் சமய வகுப்பு நடந்து கொண்டிருந்தது. இதற்காக கோயில் வளாகத்தில் உள்ள அலுவலக கட்டிட அறைகள் திறக்கப்பட்டு இருந்தது.
கோயில் அறையில் அம்மனுக்கு திருவிழா காலங்களில் அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள வெள்ளி முக அங்கி, நகைகள், பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் வெள்ளி முக அங்கியை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். வெள்ளி அங்கி மாயமாகி இருந்ததை கண்டு கோயில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அறை முழுவதும் தேடி பார்த்தனர். பல கட்டமாக தேடி பார்த்தும் வெள்ளி முக அங்கி கிடைக்கவில்லை. அதே வேளையில் மற்ற பொருட்கள், நகைகள் அங்கிருந்தன. இந்த வெள்ளி அங்கி மார்த்தாண்டத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் அம்மனுக்கு நேர்ச்சை கடனாக வழங்கியதாகும். இதுகுறித்து கோயில் கமிட்டி தலைவர் நாகப்பன் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
