×

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

மயிலம், ஜன. 21: திண்டிவனம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவரில் ஒருவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், மேலும் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சஞ்சீவிராயன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சீதாராமன். இவர் கடந்த 17.6.2025 அன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே தினத்தில் அப்பகுதியில் மேலும் 2 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டது குறித்து புகார் வந்ததை தொடர்ந்து திண்டிவனம் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் திண்டுக்கல், லிங்கவாடி நத்தம் பகுதியை சேர்ந்த வினோத் குமார் (எ) பூனை வினோத் (25), மதுரையை சேர்ந்த செல்வ வர்த்தன் (25), சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த பிரசாந்த் (எ) எலி (29) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அந்த வழக்கு திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-1 ல் நடந்து வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி வினோத்குமாருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், செல்வ வர்த்தன், பிரசாந்த் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசி உத்தரவிட்டார்.

Tags : Mayilam ,Tindivanam court ,Tindivanam ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்