×

புதிதாக தொடங்கப்பட்ட மாதவரம், மணலி படகு குழாமில் ஒன்றிய அரசு அதிகாரிகள் ஆய்வு

மணலி, ஜன.21: மாதவரம், மணலி ஏரிகளில் புதிதாக தொடங்கப்பட்ட படகு குழாமில் ஒன்றிய அரசின் அம்ரூத் திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, திட்ட கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாக கூறி மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். மாதவரம், மணலி ஏரிகளை ரூ.24.41 கோடி செலவில் புனரமைத்து, சுற்றுலா தளமாக மாற்றி பல்வேறு அம்சங்களுடன் படகு குழாம் அமைக்கப்பட்டு, கடந்த 13ம் தேதி பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் புதிதாக திறக்கப்பட்ட மாதவரம் மற்றும் மணலி படகு குழாமிற்கு குடும்பத்துடன் வருகை தந்து குழு படகு, வாட்டர் ஸ்கூட்டர் மற்றும் பெடல் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

சென்னையில், பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த படகு குழாம், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாளுக்குநாள் படகு குழாமிற்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக படகு குழாமில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தலைமையில் அதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஏரியின் கட்டமைப்பிற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பு நிதி வழங்கிய அம்ரூத் திட்ட இணை செயலர் கிரேஸ் எல்.பாஸு தலைமையில் அதிகாரிகள் நேற்று மணலி ஏரியை ஆய்வு செய்தனர். படகு குழாமில் தற்போது கட்டமைப்புகள் கூடுதலாக செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்து மணலி மண்டல உதவி ஆணையர், தேவேந்திரனிடம் கேட்டறிந்தனர்.

அப்போது பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய நல்ல திட்டத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்தி உள்ளதாக இணைச் செயலர் கிரேஸ் எல்.பாஸு பாராட்டினார். இதுகுறித்து மணலி மண்டல அதிகாரிகள் கூறுகையில், ‘‘மணலி ஏரியின் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.4.55 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற உள்ளது. இதில் சுற்றுச்சுவர், நடைபாதை இரும்பு தடுப்பு வேலி, அழகிய இருக்கைகள், அலங்கார விளக்குகள், பூச்செடிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் பொதுமக்களின் வசதிக்காக கடைகள், தியேட்டர், வாலிபால், பேட்மிண்டன், தீவு இவற்றுடன் ஏரி நீர் சுகாதாரமாக இருக்க சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சூட்டிங் ஸ்பாட் போன்றவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வெகு விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாதவரம் ஏரியையும், அம்ருத் திட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags : Union Government ,Manali ,AMRUTH ,MATAWARAM ,Manali Lakes ,
× RELATED காசிமேடு பகுதியில் பச்சிளம் ஆண்...