×

டாஸ்மாக் கடையை மூடக்கோரி அதிமுகவினர் போராட்டம்

 

தாம்பரம், ஜன.20: கிழக்கு தாம்பரம், பாரதமாதா சாலையில் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளி, டியூஷன் சென்டர்கள், மருத்துவமனை, வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளன. மேலும், தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் குரோம்பேட்டையில் இருந்து சிட்லபாக்கம், தாம்பரம் சானடோரியம் வழியாக கிழக்கு தாம்பரம், சேலையூர், மேடவாக்கம், அகரம் தென் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய முக்கிய சாலையாக உள்ளதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், பாரதமாதா சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனியார் மருத்துவமனை நடுவே அமைத்துள்ளது. இந்த கடையில் மது பாட்டில்களை வாங்கும் குடிமகன்கள் கடையின் எதிரே சாலையோரம் உள்ள மரங்களின் கீழ் அமர்ந்து மது அருந்துகின்றனர். மதுபோதையில் தகராறில் ஈடுபடுகின்றனர். அந்த கடைக்கு உட்பட்ட பாரில் 24 மணி நேரமும் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனிடையே, பாரதமாதா சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணியினர் நேற்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த சேலையூர் காவல் நிலைய போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : AIADMK ,TASMAC ,Tambaram ,Bharat Mata Road ,East Tambaram ,Tambaram-Velachery ,
× RELATED பஸ் பயணியை தாக்கிய போக்குவரத்து ஊழியர்கள்