×

வீட்டை அலங்கரிக்கும் பெண்

ஒரு நாள், ஒரு கணவன் மனநல மருத்துவரை சந்திக்கவந்தார். அவனுடைய முகபாவனையிலேயே ஒரு வகையான அலட்சியமும், தன்னைப் பற்றிய பெருமையும் தெளிவாகத் தெரிந்தது. அவனை அமரச் செய்த மருத்துவர், மெதுவாக உரையாடலைத் தொடங்கினார். மருத்துவர் அவனிடம்,“நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த கணவன் சிறிது பெருமிதத்துடன், “நான் ஒரு வங்கியில் கணக்காளராக இருக்கிறேன்” என்றார். மருத்துவர் அடுத்த கேள்வியை வைத்தார்.

“உங்கள் மனைவி என்ன செய்கிறார்?” என்றதும், கணவன் சற்றும் யோசிக்காமல், “அவள் வேலைக்குப் போவதில்லை. வீட்டில் சும்மா இருக்கிறாள்” என்று பதிலளித்தான். மருத்துவர் அவன் பதிலைக் கவனமாகக் கேட்டார். பின்னர் அமைதியாக, “அப்படியானால், உங்கள் வீட்டில் காலை உணவு யார் சமைப்பது?” என்று கேட்டார். கணவன், “என் மனைவிதான். அவள் வீட்டில்தானே இருக்கிறாள்” என்றான். “உங்கள் மனைவி எத்தனை மணிக்கு எழுந்திருப்பாள்?” என்று மருத்துவர் தொடர்ந்தார்.

“காலை ஐந்து மணிக்கே எழுந்திருப்பாள். சமைப்பதற்கு முன் வீட்டை பெருக்கி, சுத்தம் செய்ய வேண்டுமல்லவா” என்றான் கணவன். மருத்துவர் அவனையே பார்த்தபடி,“உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லுவது யார்?” என்று கேட்டார். “அவள்தான். நான் வேலைக்குச் செல்ல வேண்டியவன் அல்லவா?” என்று அவன் சொன்னான்.“பிள்ளைகளை பள்ளியில் விட்டபின், அவள் என்ன செய்வாள்?” என்ற கேள்வி வந்தது. “பள்ளியில் விட்டுவிட்டு, காய்கறி கடைக்குச் சென்று வாங்குவாள். வீடு திரும்பியதும் துணிகளைத் துவைப்பாள்” என்றான். மருத்துவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “நீங்கள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.
“நான் நாள் முழுவதும் வேலை செய்திருப்பதால் ஓய்வெடுப்பேன்” என்றுகணவன் இயல்பாகச் சொன்னான்.

“அந்த நேரத்தில் உங்கள் மனைவி என்ன செய்வாள்?” என்று மருத்துவர் கேட்டார். அவன் சற்று அலட்சியமாக,“பிள்ளைகளை படிக்க வைப்பாள், இரவு உணவு சமைப்பாள். பிறகு பரிமாறுவாள். அதற்குப் பிறகு பாத்திரங்களை கழுவுவாள். பிள்ளைகளைத் தூங்க வைப்பாள்” என்றான். அந்த நிமிடம், மருத்துவர் அவனை நேராகப் பார்த்தார். அவரது கண்களில் கண்டிப்பு இல்லை; ஆனால் உணர்த்தும் ஆழம் இருந்தது. அவர் மெதுவாகச் சொன்னார்:“நீங்கள் ஒரு வங்கியில் சில மணி நேரம் வேலை செய்கிறீர்கள்.

ஆனால் உங்கள் மனைவி, காலை முதல் இரவு வரை சம்பளம் இல்லாமல், விடுமுறை இல்லாமல், பாராட்டு இல்லாமல், குடும்பத்திற்காக இடையறாது உழைக்கிறாள். ஆனால் நீங்களோ ‘சும்மா இருக்கிறாள்’ என்று சொல்கிறீர்கள்.” அந்த வார்த்தைகள் கணவனின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அவன் முதன்முறையாக, தன் மனைவியின் நாள் முழுவதையும் சிந்திக்கத் தொடங்கினான். இறைமக்களே, கிறிஸ்தவ விசுவாசத்தில், வேலை என்பது சம்பளத்தால் அளவிடப்படுவதில்லை; அன்பால் அளவிடப்படுகிறது. வீட்டில் இருந்து குடும்பத்தை கட்டி எழுப்பும் பெண், தேவன் கொடுத்த ஒரு உயர்ந்த பொறுப்பை நிறைவேற்றுபவள். சமையலறையும், குழந்தைப் பராமரிப்பும், வீட்டு பொறுப்புகளும் மனித கண்களில் சிறியதாகத் தோன்றலாம்; ஆனால், அப்பணி வார்த்தைகளால் விவரிக்க முடியாததும், அன்பிற்காக கட்டப்பட்ட ஒன்றாகவும் காணப்படுகிறது.

ஒரு வீட்டை அலங்கரிக்கும் பெண், அந்த வீட்டின் ஆதாரத் தூணாக இருக்கிறாள். அவள் வெளியில் வேலை செய்யவில்லை என்பதற்காக தாழ்ந்தவள் அல்ல. மாறாக, அவள் குடும்பத்தை தேவன் கொடுத்த ஒரு திருச்சபையாகக் கருதி, அதில் விசுவாசமும் அன்பும் விதைக்கிறாள். ஆகையால், காலை முதல் மாலை வரை குடும்பத்திற்காக இயங்கும் ஒவ்வொரு பெண்ணும் பாராட்டுக்குரியவளே. அவளை மதிப்பது மனிதநேயம் மட்டுமல்ல; அது தேவனுக்குப் பிரியமான செயலும் ஆகும். “குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்’’ (நீதிமொழிகள் 12:4) என இறைவேதம் பெண்களை உயர்வாக மதிப்பிடுகிறது.
– அருள்முனைவர். பெவிஸ்டன்.

Tags :
× RELATED மூன்று கிணறுகள்