×

டி20 உலகக் கோப்பை: வங்கதேச அணிக்கு நாளை வரை ஐசிசி கெடு: இந்தியா வர மறுத்தால் ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு

துபாய்: ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்த 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடரில் சி பிரிவில் வங்கதேச அணி இடம்பெற்று உள்ளது. இவர்கள் ஆடும் போட்டிகள் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெற உள்ளது. தற்போது வங்கதேசத்தில் மைனாரிட்டி இந்துக்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த காரணத்தை சுட்டிக்காட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த முஸ்தபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டார். இதற்கு பதிலடியாக வங்கதேசத்தில் ஐபிஎல் ஒளிப்பரப்புக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணத்தை காட்டி வங்கதேச அணி இந்தியா வந்து விளையாட ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. பி பிரிவில் உள்ள அணிகளின் ஆட்டம் கொழும்பு மற்றும் பல்லேகலேயில் நடைபெறுவதால், அந்த பிரிவில் உள்ள அயர்லாந்தை சி பிரிவுக்கு மாற்றி, தங்களை பி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்து உள்ளது. இதற்கு அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் மறுத்த நிலையில், வங்கதேச கோரிக்கையை ஐசிசியும் நிராகரித்த உள்ளது. லீக் சுற்று போட்டிகளை இந்தியாவுக்கு வந்துதான் விளையாட வேண்டும் என்று கூறி உள்ள ஐசிசி, நாளைக்குள் முடிவு சொல்ல வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு கெடு விதித்து உள்ளது. அப்படி, இந்தியா வர வங்கதேச மறுத்தால், அந்த அணிக்கு பதிலாக தற்போதைய ரேக்கிங் அடிப்படையில் ஸ்காட்லாந்து அணியை சி பிரிவில் சேர்க்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.

Tags : T20 World Cup ,ICC ,Bangladesh ,Scotland ,India ,Dubai ,ICC T20 World Cup ,Sri Lanka ,
× RELATED நியூசிலாந்துடன் தோல்வி ஏன்? இந்திய கேப்டன் கில் விளக்கம்