×

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: விறுவிறு திரில்லரில் சுறுசுறு சின்னர்

இண்டியன்வெல்ஸ்: இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று, இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜானிக் சின்னர், பிரேசிலை சேர்ந்த 35ம் நிலை வீரர் ஜோவா பிரான்கா பொன்சேகா மோதினர். அனுபவம் குறைந்த வீரராக இருந்தபோதும் அதிரடி ஆட்டம் ஆடிய ஜோவா உடன் சளைக்காமல் சுறுசுறுப்பாக மோதிய சின்னர் வீறுகொண்டு புள்ளிகளை எடுத்தார். டைபிரேக்கர்களில் முடிந்த இரு செட்களையும், 7-6 (8-6), 7-6 (7-4) என்ற கணக்கில் சின்னர் வசப்படுத்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், அமெரிக்க வீரர் பிரான்சஸ் டியாபோ ஜூனியர் களம் கண்டனர். போட்டியின் துவக்கம் முதல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை பெற்ற ஸ்வெரெவ், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி வாசை சூடி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

* விக்டோரியாவிடம் வீழ்ந்த அமண்டா
இண்டியன்வெல்ஸ் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா, கனடா வீராங்கனை விக்டோரியா வனெஸா எம்போகோ மோதினர். துவக்கம் முதல் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய விக்டோரியா எம்போகோ, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினியை, 7-5, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியா வீராங்கனை டாலியா கிப்சன் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

* யூகி பாம்ப்ரி இணை வெற்றி
இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் நேற்று, இந்தியாவை சேர்ந்த யூகி பாம்ப்ரி, சுவீடன் வீரர் ஆந்ரே கொரான்ஸன் இணை, செக் குடியரசை சேர்ந்த ஜிரி லெஹெக்கா, நெதர்லாந்தின் சாண்டர் அரென்ட் இணையுடன் மோதியது. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய பாம்ப்ரி, ஆந்த்ரே இணை, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் இவர்கள், காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Tags : Indian ,Indian Wells ,Gianni Sinner ,Indian Wells Open ,Indian Wells, USA.… ,
× RELATED 2026ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு.!