ஈரோடு, ஜன. 20: வாய்க்காலில் டைவ் அடித்த தொழிலாளி கல்லில் மோதி பலியானார்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அடுத்த கந்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (43). லேத் பட்டறை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் வடுகப்பட்டியில் உள்ள வாய்க்காலில் குளித்தார். அப்போது, விஸ்வநாதன் மேலே இருந்த திட்டில் இருந்து தலை கீழாக வாய்க்காலில் குதித்தார்.
வாய்க்காலில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அடியில் இருந்த கல்லில் தலை மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்ட சக நண்பர்கள், கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விஸ்வநாதனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி கோமதி அளித்த புகாரின் பேரில், அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
