- வீட்டு வேலை செய்பவர்கள் நல வாரியம்
- ஊட்டி
- தொழிலாளர் உதவி ஆணையர்
- சமூக பாதுகாப்பு திட்டம்
- நீலகிரி மாவட்டம்
- உதவியாளர்
- தொழிலாளர் ஆணையர்
ஊட்டி,மார்ச்12: ஊட்டியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் இன்று (12ம் தேதி) வீட்டு பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடக்கிறது. நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் உட்பட 20 வகையான தொழிலாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு வகையான கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 60 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் வீட்டு பணியாளர் நலவாரியத்தில் www.tnuwwb.in என்ற இணைதளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம்.
இந்த வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர்கள் 5 வருடத்திற்கு ஒருமுறை பதிவினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ளவர்களுக்கு திருமணம், மகப்பேறு, 2 குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, கண் கண்ணாடி மற்றும் நியமனதாரருக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகை,60 வயது நிறைவு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நல வாரியத்தில் பதிவு செய்ய இன்று (12ம் தேதி) சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஊட்டியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடக்கிறது.
இதில் பதிவு செய்வதற்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண், அசல் ஆதார் அட்டை, அசல் குடும்ப அட்டை,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கி கணக்கு புத்தகம், வயதிற்கான ஆவணத்துடன் பங்கேற்கலாம். மேலும் இணைய தளம் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வீட்டுப்பணியாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு தொழிலாளர் நல உதவி ஆணையர் லெனின் தெரிவித்துள்ளார்.
