×

பேருசார் குழந்தைகள் நலத்திட்ட தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியம் உயர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (19.01.2026) சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக கூட்டரங்கில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பேறுசார் குழந்தைகள் நலத் திட்ட (RCH) பகுதி நேர தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரூ.1,500/-லிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.7,376/- ஆக உயர்த்தி அதற்கான ஆணைகளை வழங்கி விழா பேரூரையாற்றினார்.

பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
ஊதிய உயர்வு ஆணை
தமிழ்நாட்டின் மருத்துவக்கட்டமைப்புகளுள் ஒன்றான ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் பிரசவ சேவைகள் வழங்கும் பொருட்டு, பேருசார் குழந்தைகள் நலத்திட்டம் தேசிய ஊரக நலத்திட்டத்தின்கீழ், நோயாளர் நலச்சங்கம் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ நேரங்களில் அறையினை தூய்மையாக வைத்துக் கொள்ள செவிலியர்களுக்கு உதவியாக இருக்க ஆரம்ப சுகாதார நிலைய தூய்மை பணியினை மேற்கொள்ள RCH தூய்மை பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளார்கள். ஏறத்தாழ 2002 ஆம் ஆண்டு பணிநியமனம் செய்யப்பட்ட இவர்களுக்கு மாதம் ஊதியம் ரூ.500/- என்று இருந்தது. 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றியவர்களுக்கு மாதம் 5.1,000/- என்று உயர்த்தப்பட்டது.

7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு ரூ.1,500/- என்று உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, இப்பணியாளர்களின் வாழ்வில் ஒரு விடியலை ஏற்படுத்தும் பொருட்டு, கோவிட் காலங்களில் பணியாற்றிய பேருசார் குழந்தைகள் நலத்திட்ட தூய்மை பணியாளர்கள் 938 பேர் தேர்வு செய்து அவர்கள் மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஊதியம் என்கின்ற வகையில் ஏறக்குறைய ரூ.27,000/- வரை ஊதியம் பெற்று வருகிறார்கள். அதில் மீதமிருக்கும் 1,575 பேருக்கு இன்று ஊதியம் உயர்த்தி வழங்கும் ஆணைகள் தரப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ரூ.1,500/-சம்பளத்தில் இருக்கின்ற இவர்களுக்கு ஊதியம் உயர்த்தி தர வேண்டும் என்று சொன்னார். அப்போது இந்த தகவலை அவர்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அவர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்த ஊதியம் ரூ.500/-ரூ.1,000/ மற்றும் ரூ.1,500/- என்று இருந்தது. இந்த நிலையில் இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு 938 பேருக்கு மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஏறக்குறைய ரூ.27,000/- வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பணிகள் காலியாகின்றபோது அவர்களின் கல்வித்தகுதிக்கேற்ப கோவிட் காலங்களில் பணியாற்றியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சொன்னோம், அதேபோன்று இன்னொன்று ரூ.1,500/- ஊதியம் கடந்து அவர்களுக்கு மிக விரைவில் அவர்களது பட்டியலை சரிபார்த்து ரூ.5,000/- ஆக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் தொடர்ந்து அவர்களுக்கு எந்தந்த காலக்கட்டத்தில் பணியாற்றி வருகிறார்கள் என்கின்ற விவரங்களை பெறப்பட்டு யார் யாருக்கு கல்வித்தகுதி, வயது தகுதி போன்ற விவரங்கள் பெறப்பட்டு அந்தவகையில் 1575 பேர் மீதமிருக்கிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு, அவர்களுக்கு மாதம் ஊதியம் ரூ.5,000/- வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் ரூ.5,000/- மட்டுமல்லாமல் முதலமைச்சர் ரூ.1,500/-யை தேசிய நலவாழ்வு குழுமம் மூலமாக வழங்கப்படுகிறது என்றாலும் மாநில அரசின் சார்பில் ரூ.5,876/-கூடுதலாக வழங்கப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.7,376/- வழங்க ஆணைகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்பாத்து வந்தது ரூ.5,000/- இது 10 நாட்களுக்கு முன்பாக இதே அரங்கில் அறிவிக்கப்பட்டது.

அவர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி கிடைக்கும் என்று அறிவித்தோம். அந்தவகையில் அவர்களுக்கு ரூ.5,000/- என்று அறிவிக்கப்பட்டு ரூ.7,376/- என்று உயர்த்தி வழங்கப்பட்ட ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று அவர்களது கல்வித்தகுதி மற்றும் பல விவரங்களை கேட்டு பெற உள்ளோம். அதன்பிறகு தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களில் பணியிடங்கள் காலியாகின்ற போது கோவிட் காலங்களில் பணியாற்றியவர்கள் என்கின்ற வகையிலும், ஏறத்தாழ 20 ஆண்டுகள் பணிநியமனம் செய்யப்பட்டவர்கள் என்கின்ற வகையிலும் அவர்களுக்கு முன்னுரிமை தந்து மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பணிகளில் அவர்களுக்கு நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண்தம்புராஜ், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.சோமசுந்தரம், கூடுதல் இயக்குநர்கள் மரு.சம்பத், மரு.சேரன், மரு.வினய், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர். ஜி.ஆர்.ரவீந்திரநாத் மற்றும் பேருசார் குழந்தைகள் நலத்திட்ட பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Minister Maj Superman ,Chennai ,Minister of Medicine ,Public Welfare ,Subramanian ,Chennai, Tamil Nadu ,Dr. ,M. G. ,R Medical University Partnership ,Cleaners of the Rashar Child Welfare Project ,Government Primary Health Centres ,
× RELATED மெட்ரோ ரயில்களில்...