துபாய்: வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது தொடர் தாக்குதலால் இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் இடம்பெற்றிருந்த வங்கதேச வீரர் முஸ்டாபிசூர் ரகுமான் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரித்தது. இதனால் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை டி.20 தொடரில் ஆட இந்தியா வரமுடியாது. தங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்றவேண்டும் என வங்கதேசம் போர்க்கொடி தூக்கி உள்ளது. இதையடுத்து நேற்று டாக்கா சென்ற ஐசிசி தூதர் ஆண்ட்ரூ எப்கிரேவ், பிசிபி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாதுகாப்பு காரணமாக இந்தியா வரமுடியாது என பிசிபி நிர்வாகிகள் உறுதியாக தெரிவித்தனர்.
மேலும் உலக கோப்பையில் சி பிரிவில் உள்ள தங்களை இலங்கை இடம் பெற்றுள்ள பி பிரிவுக்கும், பி பிரிவில் உள்ள அயர்லாந்தை சி பிரிவுக்கும் மாற்றினால் தங்கள் லீக் போட்டிகள் அனைத்தையும் இலங்கையில் ஆட முடியும் என பரிந்துரைத்தது. இது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்த வாரத்தில் இறுதி முடிவை ஐசிசி அறிவிக்கும் என தெரிகிறது.
