சென்னை: சென்னையில் காற்றின் தரத்தை அறிந்துகொள்ளும் வகையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைக்கும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் காற்றின் தரத்தை கண்காணிக்க தொழில்நுட்பம் அடிப்படையில் சுற்றுச்சூழல் டிஜிட்டல் சென்சார் பலகை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களில் 100 இடங்களில் மக்கள் காற்றின் தரம் குறித்து தெரிந்துகொள்ள சென்சார் போர்டுகளை வைத்துள்ளது. பிப்ரவரிக்குள் 100 இடங்களில் காற்றின் தரம் குறித்து அறியும் டிஜிட்டல் பலகை பொருத்த மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.
காற்றுமாசு என்பது உலகளவில் பொது சுகாதார பிரச்சினையாக இருக்கிறது. காற்று மாசால் மூச்சுத் திணறல், இருதய நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. சென்னையில் திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகிறது. காற்று மாசுக்கு இதுவும் ஒரு காரணமாக திகழ்கிறது. இதுபோக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்டுமானம், சாலை அமைத்தல், மின் புதைவடப் பணிகளாலும் சாலைகள் புழுதிக்காடாக காட்சி அளிக்கிறது
சென்னையில் மணலி, தியாகராய நகர், கோயம்பேடு, பெருங்குடி, வேளச்சேரி ஆகிய பகுதிகள் அதிக மாசுபாடு உள்ள பகுதிகளாக உள்ளது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள் காரணமாக நாள்தோறும் காற்றின் தரம் மாறுபடுகிறது. இதை அனைவரும் அறிந்துகொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில், சென்னையில் முதற்கட்டமாக 75 இடங்களில் காற்றின் தரம் குறித்து அறிந்துகொள்ளும் டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட இருக்கிறது. சோதனை அடிப்படையில் மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் வெளியே பொருத்தப்பட்டிருக்கிறது.
இதன் திட்ட மதிப்பு ரூ.6.36 கோடி ஆகும். போக்குவரத்து சிக்னல்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இவை அமைக்கப்படும். இந்த டிஜிட்டல் பலகைகளில் நாள் தோறும் காற்றில் உள்ள தூசுகள், நாசகார வாயுக்களின் விகிதம், காற்றின் வேகம், மழை அளவு, காற்றழுத்தம், வெப்பநிலை உள்ளிட்ட 19 வகையான தரவுகள் உடனுக்குடன் காட்சிப்படுத்தப்படும். பிப்ரவரி மாத இறுதிக்குள் டிஜிட்டல் பலகைகள் முழுமையாக அமைக்கப்பட்டுவிடும். சுற்றுச்சூழலை மாசில்லாமல் பாதுகாப்பதற்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த டிஜிட்டல் பலகைகள் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
