மதுரை: பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை, பெங்களூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. மதுரை – சென்னை இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் விலை ரூ.6000 ஆக நிர்ணயம். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் வழக்கத்தை விட அதிக கட்டணம் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை மற்றும் பெங்களூரு செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது; சாதாரண நாட்களில் உள்ள கட்டணத்தை விட 25% முதல் 300% வரை (சுமார் 3 மடங்கு வரை) கட்டணம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக பல-அச்சு (multi-axle) வோல்வோ பேருந்துகளின் கட்டணம் ரூ. 3,600 முதல் ரூ. 4,000 வரை உயர்ந்திருப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இது அதிக தேவை காரணமாகவும், பண்டிகை கால கூட்ட நெரிசலை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சாதகமாகப் பயன்படுத்துவதாலும் நிகழ்ந்துள்ளது.
குடும்பத்துடன் சொந்த ஊர் செல்வோர் மற்றும் பெங்களூரு செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பண்டிகை கால அதிக தேவை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
பொங்கல் விழா நான்கு நாட்கள் விடுமுறையை கொண்ட பண்டிகை என்பதால் மக்கள் குடும்பத்தோடு தான் சொந்த ஊர்களுக்கு பயணிக்க விரும்புகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு தனியார் பேருந்து நிறுவனங்களும் கிடுகிடுவென டிக்கெட் விலையை உயர்த்தி விடுகின்றனர். பண்டிகை காலம் என்பதால் மக்களும் வேறுவழியின்றி இந்த கட்டணத்தை கொடுக்கும் இக்கட்டுக்கு தள்ளப்படுவதாகவும் பல பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
