×

அதிக காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை: ரூ.2 கோடியில் காளைகளுக்கு உயர்தர சிகிச்சை மையம்; அலங்காநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். அலங்காநல்லூரில் ரூ.2 கோடியில் சிகிச்சை, பயிற்சி மையம் அமைக்கப்படும் என அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார். மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் தைப்பொங்கலன்று (ஜன. 15) ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. மாட்டுப்பொங்கலான நேற்று முன்தினம் பாலமேடுவில் ஜல்லிக்கட்டு நடந்தது. காணும் பொங்கல் தினமான நேற்று உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இப்போட்டியை பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று காலை 9.35 மணியளவில் மதுரை வந்தடைந்தார். அவரை விமானநிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினர், பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்றனர். அங்கிருந்து காலை 9.45 மணிக்கு கார் மூலம் புறப்பட்டு அலங்காநல்லூர் வந்தார். ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு சென்ற முதல்வருக்கு விழா கமிட்டி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வரை பார்த்த பார்வையாளர்களும் உற்சாக கரகோஷம் செய்தனர். மேடையில் அமர்ந்தபடி ஜல்லிக்கட்டை முதல்வர் ரசித்து பார்வையிட்டார். வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு தங்க மோதிரம், தங்கக்காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கினார்.

போட்டியின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த மதுரை மண், வீரம் விளைந்த மண்ணாகும். அப்படிப்பட்ட இம்மண்ணின் வீரவிளையாட்டான உலகப் புகழ் பெற்றிருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்கும்போது நமக்கெல்லாம் வீரம் வருகிறது. காளைகளை அடக்குகின்ற காளையர்களை பார்க்கின்றபோது நம்முடைய தமிழ் மண்ணுக்கு பெருமையாக இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில், வீரம் விளைந்த மதுரை மண்ணில், சங்கம் வளர்த்த மாமதுரையில், அறிவு வளர்ச்சிக்காக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டிக் கொடுத்திருக்கிறோம். அதேபோல, தமிழர்களின் அடையாளமான இந்த வீர விளையாட்டுக்கு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல்’ அரங்கமும் கட்டிக் கொடுத்திருக்கிறோம் என்பதும் மிகப்பெரிய சாதனையாகும்.

இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க முதலமைச்சராக வந்திருக்கக்கூடிய நான், ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டுச் சென்றால்தான் உங்களுக்கும் திருப்தி, எனக்கும் திருப்தியாக இருக்கும். அதனால், 2 அறிவிப்புகளை நான் மகிழ்ச்சியோடு உங்களிடத்தில் அறிவிக்க விரும்புகிறேன். முதல் அறிவிப்பாக, பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்குபெற்று, அதிக காளைகளை அடக்கி, சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில், கால்நடை பராமரிப்பு துறையில், உரிய அரசு பணி இடங்களில் பணி அமர்த்திட வழிவகை செய்யப்படும். இரண்டாவது அறிவிப்பாக, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் பகுதியில், சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும். இந்த இரு அறிவிப்புகளும் உங்களுக்கு மகிழ்ச்சி தானே. இவ்வாறு பேசினார்.

உடனே வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள், ‘மிக்க மகிழ்ச்சி’ என உற்சாக குரல் எழுப்பினர். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘இந்த மகிழ்ச்சியோடு தமிழர்கள் எல்லோரும் வெல்வோம் ஒன்றாக’’ என்றார்.
முதல்வர் பேசி முடித்ததும், அலங்காநல்லூர் ஊர் பொதுமக்கள், விழா கமிட்டி சார்பில், ‘முதல்வரின் இரு அறிவிப்புகளுக்கும் நன்றி’ என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினரை மேடையில் முதல்வர் வாழ்த்தி, சிறப்பு செய்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்பிக்கள் தங்க தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், மாவட்டச் செயலாளர் மணிமாறன், மதுரை கலெக்டர் பிரவீன்குமார், தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.

* 15 கிமீ தூரம் உற்சாக வரவேற்பு
முதல்வர் வருகையை தொடர்ந்து புதூர், கடச்சனேந்தல், ஊமச்சிகுளம், அச்சம்பட்டி, பண்ணைக்குடி, கேட்டுக்கடை பகுதிகள் என 15 கிமீ தூரத்திற்கு சாலையின் இருபுறமும் திமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தது. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலை நிகழ்ச்சிகள், மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் பூரண கும்பமரியாதை மற்றும் மலர் தூவி பொதுமக்கள் மற்றும் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். செல்லும் வழியில் திரண்டிருந்த மக்களிடமிருந்து மனுக்களையும் முதல்வர் பெற்றுக்கொண்டார்.

Tags : Government ,Jallikatu ,Chief Minister ,Alanganallur ,K. Stalin ,Jallikkat ,Alanganallur Jallikatu Festival ,Madurai District ,Avanyapurathi Thaipongalala ,
× RELATED தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே...