- மேட்டுப்பளையம்
- பாஜா அட்டெமுகா
- அட்டெமாகாவிஸ்
- முத்துபாளையம்
- மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி
- நீலகிரி மலை
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தொகுதியில் இந்த முறை பாஜ போட்டியிட முயற்சித்து வருவதால் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். நீலகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் விவசாயம், நெசவுத்தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. இத்தொகுதியில் ஆண்கள் 1,49,826. பெண்கள் 1,62,018. மூன்றாம் பாலினத்தவர் 47 என மொத்தமாக 3,11,891 வாக்காளர்கள் உள்ளனர். மேட்டுப்பாளையம் தொகுதியில் கடந்த 1951 முதல் 2021 வரை சுயேச்சை ஒரு முறை, அதிமுக 9 முறை, திமுக இரு முறை, காங்கிரஸ் 4 முறை வெற்றி பெற்றுள்ளது.
இத்தொகுதியில் தொடர்ந்து ஐந்து முறை அதாவது கடந்த 2001 முதல் 2021 தேர்தல் வரை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும், பாஜகவும் உள்ள நிலையில் மேட்டுப்பாளையம் தொகுதியை பாஜ குறி வைத்துள்ளது. குறிப்பாக மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்புகளின் ஆதரவு கிடைக்கும் என்பதால் இத்தொகுதியை பாஜ குறிவைத்துள்ளது. ஆனால் தொடர்ச்சியாக இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அதிமுக தொகுதியை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது என்று மல்லுக்கட்டி வருகின்றது.
அதோடு இத்தொகுதியில் ஒரு முறை கூட பாஜ வெற்றி பெற்றது இல்லை என்றும், இந்த சூழலில் தற்போது மட்டும் எப்படி வெற்றி பெற முடியும் என அதிமுக மூத்த நிர்வாகிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். கடந்த தேர்தல்களில் சிட்டிங் தொகுதி பார்முலா அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த முறையும் சிட்டிங் தொகுதி பார்முலாவை பின்பற்ற வேண்டும் என்றும், அதையும் மீறி டெல்லி மிரட்டல்களுக்கு அடிபணிந்து தொகுதியை அதிமுக தலைமை ஒதுக்கினால் நிச்சயம் உள்ளடி வேலைகளை செய்து தக்க பாடம் புகட்டுவோம் என்று அதிமுக நிர்வாகிகள் சபதம் ஏற்றுள்ளனர்.
* சிக்கலில் சிட்டிங் எம்எல்ஏ
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட பிறகு ஈரோடு புறநகர் மாவட்ட பொறுப்பாளராக மேட்டுப்பாளையம் சிட்டிங் எம்எல்ஏ செல்வராஜை எடப்பாடி நியமித்தார். இதனால் இவர் வரும் தேர்தலில் கோபி தொகுதியில் போட்டியிடுவாரா அல்லது தற்போதைய தொகுதியான மேட்டுப்பாளையத்திலேயே போட்டியிடுவாரா என்பது தெரியாத நிலை உள்ளது. கோபி தொகுதியில் களம் இறக்கப்பட்டால் மேட்டுப்பாளையத்தை நிச்சயம் பாஜ வாங்கிவிடும் என்கின்றனர் அதிமுகவினர்.
