புதுடெல்லி: தன்னிச்சையாக செயல்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விலங்குகள் வதையைத் தடுக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் சஞ்சய் காந்தி அனிமல் கேர் சென்டர் என்ற தொண்டு நிறுவனம், விஷால் என்பவருக்குச் சொந்தமான விலை உயர்ந்த பத்து வெளிநாட்டு வகை நாய்களைத் துன்புறுத்தல் புகாரின் பெயரில் பறிமுதல் செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் மாதமே நாய்களை உரிமையாளரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தும், அந்த உத்தரவு மதிக்கப்படவில்லை.
மேலும், டிசம்பர் மாதத்தில் மீண்டும் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அந்த அமைப்பு அதனைச் செயல்படுத்தாமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு டெல்லி கர்கார்டூமா நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதி சுரபி சர்மா வாட்ஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உரிமையாளர் தரப்பில், ‘தொண்டு நிறுவனம் வர்த்தக ரீதியான சுரண்டலுக்காகவே நாய்களைத் தடுத்து வைத்துள்ளது. ஏற்கனவே இரண்டு நாய்களை அவர்கள் விற்றுவிட்டனர்’ என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நிர்வாகக் காரணங்களைக் கூறி தப்பிக்க முயன்ற தொண்டு நிறுவனத்தின் வாதங்களை நிராகரித்த நீதிபதி, ‘உயிருள்ள ஜீவன்களை இத்தகைய நொண்டி சாக்குகளைக் கூறி துன்புறுத்த அனுமதிக்க முடியாது. நாய்களைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் செயலாகும். இது சட்டப்படி முற்றிலும் அனுமதிக்க முடியாதது’ என்று கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், உடனடியாக 10 நாய்களையும் உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இதுகுறித்த அறிக்கையை 22ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
