- ராகுல்
- திமுகா
- தில்லி
- புது தில்லி
- ராகுல் காந்தி
- கர்கே
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காங்கிரஸ்
- தமிழ் சட்டமன்றத் தேர்தல்
- திமுகா
புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் தமிழக காங்கிரசாருடன் ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது, 99 சதவீத காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசியுள்ளனர். திமுகவுடன் கூட்டணியை தொடர ராகுல் காந்தி திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளார். மேலும் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது; சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பகிரக்கூடாது எனவும் நிர்வாகிகளிடம் அவர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இருப்பினும், தமிழக காங்கிரசில் தேர்தல் தொடர்பான பணிகளில் ஒரு குழப்பமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் ராகுல்காந்தி உள்பட முக்கிய நிர்வாகிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று டெல்லி இந்திரா பவனில் ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டமாக நடந்த இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், முன்னாள் எம்பி பெ.விஸ்வநாதன், புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், கார்த்திக் சிதம்பரம், விஷ்ணு பிரசாத், வைத்தியலிங்கம், சசிகாந்த் செந்தில், கோபிநாத், ராபர்ட் புரூஸ், ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபி மனோகரன், அசன் மவுலானா, பிரின்ஸ், ஊர்வசி அமிர்தராஜ், ராமச்சந்திரன் மற்றும் துணை அமைப்புகளின் தலைவர்கள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம், கூட்டணியில் எத்தனை தொகுதிகள் பெறுவது, அதிகார பங்கு போன்ற விவகாரங்கள் பற்றி தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துகளை ராகுல்காந்தியிடம் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் வாக்கு சதவீதம், அதனை அதிகரிப்பது, கூட்டணி நிலவரம், தொகுதி பங்கீட்டை எப்படி சுமுகமாக முடிப்பது, குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் உட்கட்சி பூசலை தவிர்த்து சட்டமன்ற தேர்தல் ஒன்றுமையுடன் எதிர்கொள்வது உள்ளிட்டவைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்ற கருத்து காங்கிசார் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
ஒரு சிலர் அதிகாரத்தில் பங்கு என்பதை கட்சியின் தலைமையை மீறி தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் விமர்சித்து பேசி வருவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அது தொடர்பாகவும் ராகுல்காந்தி தமிழக காங்கிரசாரிடம் விவாதித்ததாகவும், அப்போது காரசார விவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக காங்கிரசாரில் 99 சதவீதம் பேர் திமுக கூட்டணி தொடர வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தி பேசியுள்ளனர். திமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டும் என்பதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசவோ, சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பகிரவோ கூடாது என நிர்வாகிகளுக்கு அவர் கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியே வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அளித்த பேட்டியில், ‘‘இன்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக கூட்டணி முடிவு குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. தமிழக தலைவர்களிடம் அனைத்து கருத்துகளும் பொறுமையாக கேட்கப்பட்டது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட அனைத்து கருத்துகளும் பரிசீலித்து உரிய நேரத்தில் ராகுல் காந்தி முடிவெடுப்பார். தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் இடைக்காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்தான தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இன்று (நேற்று) நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. முக்கியமாக இதனை பொதுவெளியில் கருத்துகளாக தெரிவிக்க வேண்டாம் என்று கூட்டத்தின்போது அனைத்து உறுப்பினர்களிடமும் தெரிவிக்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் தற்போது எந்த கருத்தையும் வெளியிட முடியாது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் கூட கருத்து தெரிவிக்க கூடாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியினுடைய தலைமை எடுக்கும் முடிவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அனைத்து ஒத்துழைப்பு கொடுப்பது மட்டும் இல்லாமல் அந்த முடிவை முழுமையாக ஏற்றுக் கொள்ளும்’’ என்றார்.
* காங்கிரஸ் செயற்குழு-பொதுக்குழு
தமிழக சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக அனைத்து முக்கிய தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்துவது அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 19ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஒன்றிய, மாநில அரசுகளின் செயல்பாடுகள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல், கூட்டணி உறவுகள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
