×

யு-19 ஒரு நாள் உலகக்கோப்பை அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா முதல் வெற்றி: ஹெனில் படேல் அபாரம்

 

புலவாயோ: யு-19 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில், அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடர், ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஜிம்பாப்வேயின் புலவாயோ ஸ்டேடியத்தில், `பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, தனது முதல் போட்டியில் அமெரிக்காவுடன் மோதியது.

டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய அமெரிக்கா, ஹெனில் படேல் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 107 ரன்னில் சுருண்டது. வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஹெனில் பட்டேல், 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் அமெரிக்கா 35.2 ஓவர்களை மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.

இதனை தொடர்ந்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இந்தியா 4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர், தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நீண்ட நேரம் ஆட்டம் தடைபட்டது.

மழை நின்ற பின், மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, இந்தியாவுக்கு 37 ஓவரில் 96 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வேதாந்த் திரிவேதி (2), ஆயுஷ் மாத்ரே (19), விஹான் மல்ஹோத்ரா (18) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அபிக்யான் குண்டு ஆட்டமிழக்காமல் 41 பந்தில் 42 ரன்கள் சேர்க்க, இந்தியா 17.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹெனில் படேல் தனது சிறப்பான ஆட்டத்திற்காக `ஆட்ட நாயகன்’ விருதை வென்றார். இந்தியா தனது 2வது ஆட்டத்தில் நாளை(18ம் தேதி), வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. தற்போது பி பிரிவில் புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

Tags : India ,USA ,U-19 One-Day World Cup ,Henil Patel ,Bulawayo ,50-over World Cup ,Zimbabwe ,Namibia ,Bulawayo… ,
× RELATED வார்னர் சதம் வீண்: ஸ்டீவ் ஸ்மித் அதிரடியில் சிட்னி சிக்சர்ஸ் வெற்றி