×

மதுராந்தகத்தில் 23ல் என்டிஏ கூட்டணி அறிவிப்பு கூட்டம்; பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு

 

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஹைவே இன் ஹோட்டல் எதிரில் வரும் 23ம்தேதி என்டிஏ கூட்டணி சார்பில், கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக, 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தை சீரமைக்கும் பணி, மேடை அமைப்பதற்கான இடம் தேர்வு, வாகனம் நிறுத்துமிடம், ஹெலிகாப்டர் இறங்குதளம் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இன்று காலை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக நிர்வாகிகளுடன் ஹெலிகாப்டர் இறக்கு தளம், மேடை அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ”தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெறுகிறது. எதிர்பார்த்ததைவிட கூட்டணி கட்சியினர் அதிகளவில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் 2026ல் தூய்மையான, நேர்மையான, வளர்ச்சிமிக்க கூட்டணியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது” என்றார். ஆய்வின்போது, மாவட்ட தலைவர் டாக்டர் பிரவீன்குமார், மாநில பிரிவுகளின் அமைப்பாளர் கே.டி.ராகவன், மாநில செயலாளர் வினோத் செல்வம், முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி, மதுராந்தகம் தொகுதி அமைப்பாளர் தினகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

Tags : NDA ,Madurantakam ,Narendra Modi ,Union Minister of State ,L. Murugan ,Highway Inn Hotel ,Madurantakam, ,Chengalpattu district ,Leader of the Opposition ,Edappadi Palaniswami ,
× RELATED தி.மலையில் திருவூடல் திருவிழா...