×

திருப்போரூர் பகுதியில் இயங்கும் ‘புட் ஸ்ட்ரீட்’ உணவுகள் சுகாதாரமின்றி விற்பனை..? அதிகாரிகள் கவனம் செலுத்த கோரிக்கை

திருப்போரூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் உணவு வீதி எனப்படும் புட் ஸ்ட்ரீட்கள் உருவாகி உள்ளன. சென்னை அண்ணா நகர், அம்பத்தூர், பெசன்ட் நகர், ஓ.எம்.ஆரில் துரைப்பாக்கம், நாவலூர், படூர், கேளம்பாக்கம் ஆகிய இடங்களிலும், இ.சி.ஆரில் பல இடங்களிலும் இந்த புட் ஸ்ட்ரீட்கள் செயல்படுகின்றன. நம்ம ஊர் இட்லி, தோசை, பரோட்டாவில் இருந்து எகிப்திய குணாபா வரை இந்த புட் ஸ்ட்ரீட்களில் கிடைக்கின்றன. சைவம், அசைவம், குளிர்பானங்கள், பழச்சாறுகள் என அனைத்து வகையான உணவுகளும் இங்கு கிடைக்கின்றன. ஆனால், இந்த உணவு வீதிகளில் தரம், சுகாதாரம், குடிநீர், பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே இந்த உணவு வீதிகளில் கூட்டம் களை கட்டுகிறது. உணவு விற்கப்படும் கடைகளில் மருந்துக்கு கூட குடிநீர் கொடுக்கப்படுவது இல்லை. தண்ணீர் பாட்டிலை காசு கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. சிக்கன், மட்டன், பீப் போன்றவற்றிலும், பீட்சா, பர்கர் உள்ளிட்ட உணவுகளிலும் செயற்கை நிறமிகள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. சிறிய அளவிலான கடைகளாக இருப்பதால் சுகாதாரத்தை முழுமையாக பராமரிப்பதும் கிடையாது என்றும், உணவுப் பொருட்களும், கழிவுப் பொருட்களும் அருகருகே இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புகார்கள் ஒரு புறமிருக்க கடுமையான வேலைப்பளு, மன அழுத்தம் ஆகியவற்றை குறைக்கும் இடமாகவே இந்த உணவு வீதிகள் இருக்கின்றன. பெரும்பாலான மென்பொருள் பணியாளர்கள் தங்களின் மன, உடல் ஓய்வுக்காக இவற்றை தேர்வு செய்கின்றனர். ஆகவே, இந்த உணவு வீதிகளில் விற்கப்படும் உணவுகளின் மீது உணவுப் பாதுகாப்புத்துறை கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சுகாதாரம், குடிநீர், உணவுப்பொருட்கள், செயற்கை நிறமிகள் ஆகியவற்றில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து உணவு விற்பனை செய்வோருக்கு உணவுப் பாதுகாப்புத் துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

Tags : Thiruporur ,CHENNAI ,SUBURBS ,Chennai Anna Nagar ,Ambattur ,Besant Nagar ,O. M. At ,Ril Dharippakkam ,Navalur ,Padur ,Kelambakkam ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி