மாமல்லபுரம்: மாமல்லபுரத்திற்கு கல்வி சுற்றுலா வந்த மாணவர்கள் புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர். மாமல்லபுரத்தை 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்களை அழகுர செதுக்கினர். இதனை சுற்றி பார்க்க தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
மேலும், புராதன சின்னங்களின் வரலாறுகள் மற்றும் அதனை செதுக்கிய மன்னர்கள் குறித்த அரிய தகவல்களை தெரிந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களையும், பிற மாநில பள்ளி மாணவர்களையும் பஸ், ரயில் மூலம் பள்ளி ஆசிரியர்கள் அனுமதி பெற்று அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை விடுமுறையையொட்டி ஏராளமான பள்ளி மாணவர்கள் நேற்று மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, மாணவர்கள் வரிசையாக சென்று புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்து ரசித்தனர். அப்போது, வெண்ணெய் உருண்டை பாறை முன்பு செல்பி மற்றும் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்ட மாணவர்கள் வெண்ணெய் உருண்டை பாறையில் சறுக்கி விளையாடி மகிழ்ந்தனர்.
