வேலூர், ஜன.10: தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓ பதவி உயர்வு வழங்க பரிந்துரைகளை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு வரும் 2026-27ம் ஆண்டுக்கான உத்தேச காலிப்பணியிட மதிப்பீடு நிர்ணயம் செய்ய கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு ஆணைகள் எதிர்நோக்கப்படுகிறது. இவ்வகையில் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்தப் பணியிடங்களுக்கு 2026-27ம் ஆண்டில் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதியான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்ய வேண்டும்.
அதன்படி அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப்பட்டியலில் இருந்து பரிசீலிக்க தகுதியானவர்களின் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது. அதில் இடம்பெற்றுள்ள தலைமையாசிரியர்களுள், தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் சார்பான விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து குறிப்பிட்ட தேதிகளில் மாவட்ட வாரியாக சார்ந்த பிரிவு எழுத்தர், கண்காணிப்பாளர் மூலம் பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ள தலைமையாசிரியர்கள் சார்பான 01.01.2021 முதல் 31.12.2025 வரையிலான மந்தண அறிக்கைகள் தவறாமல் இணைத்து அனுப்ப வேண்டும். மந்தண அறிக்கைகள் பெறப்படாத தலைமை ஆசிரியர்கள் பெயர், மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டாது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களது கருத்துருக்களை மாவட்ட வாரியாக வரும் 27, 28 மற்றும் 29ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தமிழ்நாடு குடிமுறைப் பணி விதியின் கீழ் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டிருப்பின் அதன் நகல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கையின் தற்போதைய நிலை, தண்டனை அளிக்கப்பட்டிருப்பின் அதன் நகல் மற்றும் தண்டணை நிறைவேற்றப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
