டெல்லி : நாடு முழுவதும் பிரதமர் மோடியின் இரட்டை என்ஜின் அரசில் ஊழல், அதிகார அத்துமீறல்கள் தலைவிரித்து ஆடுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,”பாஜக ஆட்சியில் ஊழல், அதிகார அத்துமீறல்கள், ஆணவம், வெறுப்பு ஆகியவை நாடு முழுவதும் ஊடுருவி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது. உத்தரகாண்டில் அங்கிதா பண்டாரியின் கொடூரமான கொலை நாட்டையே உலுக்கி உள்ளது. உன்னாவ் சம்பவத்தில், குற்றவாளிகளை அதிகார வர்க்கம் எவ்வாறு பாதுகாத்தது என்பதை ஒட்டுமொத்த தேசமே கண்கூடாக பார்த்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நச்சு குடிநீரால் ஏற்பட்ட மரணங்கள், குஜராத், அரியானா, டெல்லியில் மாசடைந்த குடிநீர், ராஜஸ்தானில் ஆரவல்லி மலை பிரச்சனை, அரசு மருத்துவமனைகளில் எலிகள் கடித்து பச்சிளம் குழந்தைகள் இறப்பது, இருமல் மருந்து என நாட்டின் ஒவ்வொரு இந்தியரும் நசுக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மோடி அரசு கோடீஸ்வர நண்பர்களின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்துகிறது, “இவ்வாறு தெரிவித்தார்.
