×

2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; மக்கள் மகிழ்ச்சி

சென்னை: தமிழகம் முழுவதும் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.3 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஆலந்தூரில் பொங்கல் தொகுப்பு, ரூ.3 ஆயிரம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடை திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திடும் வகையில், 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகள் மற்றும் 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகள் வழங்க தமிழ்நாடு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இத்திட்டத்தின் மூலம் மக்கள் பயன்பெறுவதோடு, கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது. அதன்படி, பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கிடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை, பட்ரோடு நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் வழங்கி, தொடங்கி வைத்தார்.

முதல்வர் தொடங்கி வைத்ததையடுத்து அனைத்து நியாய விலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. முன்னதாக, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். இதை தொடர்ந்து சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, உலகப்பா மேஸ்திரி தெரு, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாய விலை கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவார்கள். பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பரிசு மற்றும் வேட்டி-சேலைகள் ஆகியவை மொத்தம் 7,604 கோடியே 29 லட்சத்து 47 ஆயிரத்து 959 ரூபாய் செலவில் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசை பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்த்திட, நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் நேற்று (8ம் தேதி) முதல் 12ம் தேதி (திங்கள்) வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும். அந்தந்த மாவட்டத்தில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் இத்திட்டத்தினை நேற்று தொடங்கி வைத்தனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், இ.கருணாநிதி, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, தலைமை செயலாளர் முருகானந்தம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) வீரப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படுகிறது.
* பொங்கல் பண்டிகையையொட்டி 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகள் மற்றும் 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகள் வழங்கப்படுகிறது.
* பொங்கல் பரிசை டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம். வரும் 12ம் தேதி (திங்கள்) வரை பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Alandur, Chennai ,
× RELATED நீதிமன்றத்துக்கு ஏன் அழுத்தம்...