- ஸ்டாலின்
- Nalumavadi
- நாசரேத்
- தென்திருப்பாரை மாவட்டம்
- மருத்துவ அதிகாரி
- பார்த்திபன்
- மூக்குப்பிரி
- அரசு
- ஆரம்ப சுகாதார நிலையம்
- சோனியா…
நாசரேத், ஜன. 8: நாலுமாவடியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம், நாளை மறுதினம் (10ம் தேதி) நடக்கிறது. தென்திருப்பேரை வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன், மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சோனியா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம், நாளை மறுதினம்(சனிக்கிழமை) நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதில் பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, மகளிர் நல மருத்துவம், தோல் மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவம், இருதயவியல் மருத்துவம், குழந்தைகள் நலப்பிரிவு, சித்தா மற்றும் இயற்கை மருத்துவம், காசநோய் சிறப்பு மருத்துவம் உள்பட 17 வகையான மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று சிகிச்சை அளிக்கின்றனர்.
மருத்துவர் பரிந்துரையின் பேரில் நவீன கருவிகளை கொண்டு யுஎஸ்ஜி ஸ்கேன், இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகளும் முகாமிலேயே மேற்கொள்ளப்படும். மேலும் ரத்த அழுத்தம், அனைத்து வகையான ஆய்வக பரிசோதனைகளான ரத்தத்தில் சர்க்கரை அளவு, உப்பு சத்துக்கள் இலவசமாக பரிசோதிக்கப்படும். மக்களை தேடி மருத்துவம், சிறுநீரக சிறப்பு பிரிவு, மனநல மருத்துவம், நரம்பு சிகிச்சை, முதியோருக்கான சிறப்பு சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. முகாமில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்படும். பங்கேற்க வரும் பயனாளிகள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகலை கொண்டு வந்து பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு கூறியுள்ளனர்.
