×

சென்னையில் பிறந்தவர் முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கல்மாடி காலமானார்

புனே: மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81. அரசியலிலும் விளையாட்டுத்துறையிலும் பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்தவர் சுரேஷ் கல்மாடி. 1944ல் சென்னையில் பிறந்த கல்மாடி, புனேவில் உள்ள பெர்குசன் கல்லூரியில் பயின்றார். விமானப்படை விமானியாக பணிபுரிந்த கல்மாடி 1971 இந்தியா – வங்கதேச போரில் பங்கேற்றார். பின்னர் சரத்பவாரால் அடையாளம் காணப்பட்ட பிறகு அரசியலில் நுழைந்தார்.

புனேவில் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் பிளவுபட்ட போது காங்கிரஸ் கட்சியிலேயே இருந்துவிட்டார். 1982, 1988, 1994 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரயில்வே துறை இணையமைச்சராகவும் பதவி வகித்தார். 1997ல் புனேவில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு கொடுக்காததால், புனே விலாஸ் அகாடி என்ற கட்சியை தொடங்கி போட்டியிட்டார்.

ஆனால் அந்த தேர்தலில் கல்மாடி தோல்வி அடைந்தார். இதற்கிடையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பதவி வகித்தார். 2011ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி நடத்தியதில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்து அவர் கைதாக நேர்ந்தது. 81 வயதான அவர், நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 அளவில் காலமானார்.

அவரது மறைவுக்கு சரத்பவார், அஜித்பவார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். புனேவில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர், இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

Tags : Chennai ,Union Minister ,Suresh Kalmadi ,Pune ,Congress ,Kalmadi ,Fergusson College ,Pune… ,
× RELATED பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு