புதுடெல்லி: டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி காற்று மாசு விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்கு நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விர்வான அறிக்கையை தாக்கல் செய்து, அதுசார்ந்த விளக்கத்தை அளித்தார். அதில்,‘‘கனரக வாகனங்கள் மற்றும் கட்டுமானங்கள் அதிக அளவில் மாசுவை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக கட்டுமானங்களுக்கு ஒருசில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தும் அதனை சரிவர பின்பற்றப்படவில்லை. கடந்த 2022ல் காற்று தர மேலாண்மை ஆணையம் காற்று மாசுவை தடுக்க ஒரு ஆய்வு மேற்கொண்டது. ஆனால் அதன் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து எந்த ஒரு விவகாரத்தையும் பொதுத்தளத்தில் காற்று தர மேலாண்மை ஆணையம் வெளியிடவில்லை’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி,‘‘தற்போது நாம் பேசி கொண்டிருக்கும்போதே 40சதவீத காற்று மாசுவை வாகனங்கள் ஏற்படுத்துகின்றன. ஆனால் காற்று மாசுவுக்கு காரணம் மொத்தமாக விவசாயிகள் மீது போடப்படுகிறது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிக அளவில் விவசாய பயிர் கழிவுகள் எரிக்கப்பட்டிருந்தன. அப்படி இருந்தும் அந்த காலகட்டத்தில் தான் கடைசியாக டெல்லி மக்கள் நீல வானத்தை இயற்கையாக கண்டார்கள். இதனை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் காற்று மாசு விவகாரத்தில் நீண்ட கால தீர்ப்பு தான் நமக்கு தேவை ஆகும். அதனை தான் உச்ச நீதிமன்றமும் எதிர்பார்க்கிறது. வாகன போக்குவரத்து அதிகம் ஆசை ஏற்படுத்துகிறது என்று கூறும் பட்சத்தில் அதனை நாம் முற்றிலும் நிறுத்தி விட முடியுமா என்றால் கேள்வியாக தான் எழுகிறது. எனவே காற்று மாசுவை தடுக்க மாற்று வழிகளை தான் நாம் யோசிக்க வேண்டும்.
இதற்காக புதுப்புது திட்டங்களை வகுக்கப்பட வேண்டும். அதுகுறித்து ஒன்றிய அரசு மற்றும் டெல்லி அரசு ஆகியவை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது இந்த விவகாரத்தில் உரிய நிபுணர்கள் அடங்கிய குழுவானது காற்று மாசுவை தடுக்க திட்டங்களை வகுக்க வேண்டும். மேலும் காற்று மாசுவை தடுக்க திட்டத்தை வகுக்க எதற்காக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு காத்திருக்க வேண்டும்.
ஒவ்வோரு முறையும் நாங்கள் இதனை தான் வலியுறுத்துகிறோம். ஆனால் அதனை அரசுகள் கருத்தில் கொண்டதாக தெரியவில்லை. இதில் காற்று மாசுவை தடுப்பதற்கான திட்டங்களை, காற்று தர மேலாண்மை ஆணையமானது வகுக்க வேண்டும். அதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கண்டனத்துடன் கூடிய உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
