×

சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு பின் அசாம் வரைவு வாக்காளர் பட்டியலில் முறைகேடு: காங்.குற்றச்சாட்டு

கவுகாத்தி: அசாமில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிற்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1.35 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாநில வரைவு வாக்காளர் பட்டியலில் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையருக்கு அசாம் எதிர்க்கட்சி தலைவர் தேபப்ரதா சைகியா கடிதம்எழுதி இருக்கிறார்.

இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, ‘‘அசாமில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளது. ஊடக செய்திகள் மற்றும் கள ஆய்வுகள் அசாமி மொழிப்பேசாத வாக்காளர்களை அங்கீகரிக்கப்படாத முறையில் சேர்க்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. இது தேர்தல் செயல்முறையின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்.

ஒரு வீட்டில் குடியிருப்பவர்களுக்கே தெரியாமல், அந்த வீட்டு முகவரியில் அடையாளம் தெரியாத நபர்கள் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சம்பவங்களும் வெளிவந்துள்ளது. கவுகாத்தியில் உள்ள தாயபுல்லா சாலையில் 44 மற்றும் 45ம் எண் வீடுகளில் குடும்பத்தினருக்கு தெரியாமல் அசாமியர் அல்லாத 4 நபர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

நசிரா தொகுதியில் இல்லாத 00 என்ற வீட்டு எண்ணுக்கு வாக்காளர் பதிவுகள் காணப்படுகின்றது. இத்தகைய முறைகேடுகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போய்விடுகின்றன. இது இந்த அடையாளம் தெரியாத வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வழிவகுக்கும். இத்தகைய போலியான முகவரிகளின் கீழ் பதிவுகளை சேர்ப்பது நடைமுறை விதிகளை மீறுவது மட்டுமல்லாமல் வாக்காளர் பட்டியலில் சரிபார்க்கும் தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை கடுமையாக பாதிக்கிறது.

திருத்த செயல்முறையின் நம்பகத்தன்மை குறித்தும் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. அங்கீகரிக்கப்படாத அல்லது அடையாளம் தெரியாத வாக்காளர் பதிவுகள் அகற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அனைத்து முறைகேடுகளும் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தீர்க்கப்படும் வரை வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியை நிறுத்திவைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags : Assam ,Congress ,Guwahati ,Deb Pratah ,Chief Election Commissioner ,
× RELATED பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு