திருவள்ளூர், ஜன.7: தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியை, அக்கட்சியின் மாநில தலைவர் தாக்கிய சம்பவம் குறித்து, ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி நரேஷ்பாபு. இவர், நேற்று முன்தினம் இரவு தனது காரில் வீட்டிற்கு சென்றபோது, பூந்தமல்லி அடுத்து கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடியில் வாகன வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார். அதேபோன்று, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் ஆனந்தனும், தனது கட்சியின் நிர்வாகிகளுடன் வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிச் செல்லும்போது, அதே சுங்கச்சாவடியில் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது, நரேஷ் பாபுவை, ஆனந்தன் அழைத்து தன்னை பின் தொடர்ந்து பாலோ செய்து வருவாயா எனக்கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நரேஷ் பாபு, வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஐயப்பன், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
