புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், அரசியல் ஆய்வாளருமான சஞ்சய் ஜா, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி குறித்துப் பல்வேறு கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். காங்கிரஸ் கட்சித் தொடர்ந்து தேர்தல் சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், கட்சியில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் உடனடியாகச் செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் அளித்துள்ள பேட்டியில், ‘கட்சியின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் களப்பணிகளை கவனிப்பதில் பிரியங்கா காந்தி மிகவும் வலிமையானவர். எனவே அவரிடமே கட்சியின் தலைமைப் பொறுப்பை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.
அதேவேளையில், ராகுல் காந்தி கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் சித்தாந்தத் தூதுவராக செயல்படுவது கட்சிக்கு நன்மை பயக்கும். தற்போது மல்லிகார்ஜுன கார்கே தலைவராக இருந்தாலும், ராகுல் காந்தியே உண்மையான அதிகார மையமாகச் செயல்படுவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது கட்சியின் நம்பகத்தன்மையைப் பாதிக்கிறது. அதிகாரத்தைப் பரவலாக்கும் வகையில் சச்சின் பைலட் போன்ற இளம் தலைவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தெளிவான திட்டமிடல் காங்கிரஸ் கட்சிக்கு அவசியம்;
வெறும் சமூக ஆர்வலர்களாக மட்டும் செயல்படாமல், ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பிரியங்கா, ராகுல் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் இணைந்து செயல்பட வேண்டும். மேலும், அன்றாட நிர்வாகப் பணிகளை விட, விளிம்புநிலை மக்களுக்காகக் குரல் கொடுக்கும் பணியே ராகுல் காந்திக்கு அதிகம் பொருந்தும்’ என்று சஞ்சய் ஜா தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
