புதுடெல்லி: டெல்லியில் பிப்ரவரி 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடக்க உள்ளது. இந்த நிலையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வட்ட மேஜை மாநாடு நேற்று நடந்தது. பிரதமர் மோடியின் இல்லத்தில் நடந்த மாநாட்டில் உலகளாவிய தாக்க சவாலுக்கு தகுதி பெற்ற பன்னிரெண்டு இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கலந்துரையாடலில் பங்கேற்று தங்களுடைய புதுமையான திட்டங்களை முன்வைத்தன.
இதில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா மீதான உலகத்தின் நம்பிக்கையே அதன் பலம். இந்திய செயற்கை நுண்ணறிவு(ஏஐ) மாதிரிகள் நெறிமுறைகள், பாரபட்சமற்ற, வெளிப்படையான, தரவு தனியுரிமை கொள்கைகளை அடிப்படையாக கொண்டவை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்தியாவில் இருந்து உலகளாவிய தலைமையை நோக்கி ஸ்டார்ட் அப்கள் செயல்பட வேண்டும். இந்தியா உலகளவில் மலிவு விலையில் செயற்கை நுண்ணறிவு, உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு மற்றும் சிக்கனமான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க முடியும். இந்திய ஏஐ மாதிரிகள் தனித்துவமாக இருக்க வேண்டும். உள்ளூர் மற்றும் பூர்வீக உள்ளடக்கம், பிராந்திய மொழிகளை ஊக்குவிக்க வேண்டும்.
இந்தியாவின் எதிர்காலத்தின் இணை-கட்டமைப்பாளர்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்முனைவோர் ஆவர். புதுமை மற்றும் பெரிய அளவிலான செயல்படுத்தல் ஆகிய இரண்டிற்கும் நாடு மகத்தான திறனைக் கொண்டுள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
