- ஐக்கிய மாநிலங்கள்
- வாஷிங்டன்
- ஆந்திரா
- கோட்டிகலபூடி கிருஷ்ணா
- பாலக்கோலு பகுதி, மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிர
வாஷிங்டன்: அமெரிக்காவில் குடிபோதையில் எதிரே வந்த வாகனம் மோதிய விபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர பிரதேசம், மேற்கு கோதாவரி மாவட்டம் பாலக்கொல்லு பகுதியைச் சேர்ந்தவர் கோட்டிகலபுடி கிருஷ்ண கிஷோர் (45). அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார். இந்நிலையில், இவரும் இவரது மனைவி ஆஷா கண்ணாவும் (40) கடந்த டிசம்பர் 23ம் தேதி தங்களது சொந்த ஊருக்குச் சென்று விடுமுறையைக் கழித்தனர்.
பின்னர் துபாயில் புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அமெரிக்கா திரும்பினர். மேரிலாந்து மாகாணத்தில் கடந்த 4ம் தேதி இவர்கள் காரில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே தவறான பாதையில் வந்த சரக்கு வாகனம் ஒன்று இவர்கள் கார் மீது பயங்கரமாக மோதியது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபரால் இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியதில், சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காரின் பின் இருக்கையில் இருந்த இவர்களது மகள் சிவானி (21) மற்றும் மகன் சுச்சாய் (16) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து பாலக்கொல்லுவில் உள்ள கிஷோரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கத் தெலுங்குச் சங்கம் மற்றும் தன்னார்வலர்கள், காயமடைந்த பிள்ளைகளுக்கு உதவவும், உயிரிழந்த தம்பதியின் உடல்களைத் தாயகம் கொண்டு செல்லவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
